‘ஒமிக்ரோன்’ திரிபினால் மிதமான நோய் பாதிப்பு

டெல்டா வகையுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு கடுமையாக நோய்வாய்ப்பட்டு நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படும் சாத்தியம் குறைவாகவே உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஆய்வு முடிவுகளைத் தென்னாபிரிக்காவும் பிரிட்டனும் வெளியிட்டுள்ளன.

ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்படுவோர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் சாத்தியம் 80 வீதம் குறைவு என்று தென்னாபிரிக்காவின் தேசியத் தொற்றுநோய்க் கல்விக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே நேரம், ஒமிக்ரோன் வைரஸ் 10 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது என்று எடின்பேர்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனில் ஒமிக்ரோன் வைரஸ் அதிவேகமாகப் பரவிவருகிறது. அங்கு ஒரே நாளில் 100,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது வைரஸ் பரவல் ஆரம்பித்ததில் இருந்து பதிவாகும் மிக அதிக எண்ணிக்கையாக உள்ளது. இந்த வைரஸ் திரிபு பற்றி ஆழமான புரிதலை பெறுவது அதற்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி தீர்மானிக்க நாடுகளுக்கு உதவியாக அமையும்.

இதேவேளை கொவிட்–19 நோய் அடுத்த ஆண்டு முடிவுக்கு வந்தாக வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசுஸ் கூறியுள்ளார்.

2022ஆம் ஆண்டு கொவிட்–19இன் முடிவாகவும் ஒருமைப்பாட்டின் புதிய தொடக்கமாகவும் இருக்க வேண்டும் என்றும் டொக்டர் டெட்ரோஸ் கூறினார்.

அனைவருக்கும் சமமான முறையில் தடுப்பூசிகள் சென்றுசேர்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

தற்போதுள்ள தடுப்பூசித் திட்டங்களை அவர் சாடினார்.

மக்கள் தொகையில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுள்ள நாடுகளுக்கு மேலும் தடுப்பூசிகள் சென்றுசேர்வதை அவர் சுட்டிக்காட்டினார்.

Fri, 12/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை