கடந்த வெள்ளி ஏற்பட்ட மின் தடைக்கு நாசகார சதி நடவடிக்கை காரணமா?

பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டுகோள்

இ.மி.சபையின் சிரேஷ்ட பொறியியலாளர் சங்கம் நேற்று பகிரங்க கோரிக்கை

நாடளாவிய ரீதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மின்தடை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசார ணை நடாத்தப்பட வேண்டும். அதன் ஊடாக இச்சம்பவத்தில் சதி நாசகார வேலைகள் இடம்பெற்றுள்ளதா என்பதைக் கண்டறிய முடிவதோடு எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இம்மின்தடையில் சதி நாச வேலைகள் இடம்பெற்றிருப்பது உறுதிப்படுத்தப்படுமாயின் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய தண்டணை வழங்கப்படுவதன் மூலம் இவ்வாறான செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தவிர்த்துக்கொள்ளவும் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவதையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று சங்கத்தின் தலைவர் கலாநிதி எச்.எம். விஜேகோன் நேற்றுத் தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். சங்கத்தின் உப தலைவர் டி.கே.பி. யூ. குணத்திலக்க, இணைச் செயலாளர் ஏ.எல். இஸட் ஹுஸைன், நிறைவேற்று குழு உறுப்பினர் ரந்திக்க பத்திரகே, உறுப்பினர் நொயல் பிரியந்த உள்ளிட்டோர், தலைவர் கலாநிதி எச்.எம். விஜேகோன் தலைமையில் கலந்து கொண்ட இச்செய்தியாளர் மாநாட்டில் மேலும் குறிப்பிட்டதாவது, நாம் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகளில் அதிருப்தியுற்று அதிலிருந்து வெளியேறி இரு மாதங்களுக்கு முன்னர் இச்சங்கத்தை ஸ்தாபித்திருக்கின்றோம்.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கமானது தொழில்சார் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கியது. இருந்த போதிலும் இச்சங்கத்தின் தற்போதைய நிர்வாக சபையின் சிலரது செயற்பாடுகள் தனிப்பட்ட நலன்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது. ஒரு தொழிற்சங்கம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதைக் கூட அறியாதவர்கள் போன்று அவர்கள் அண'மைக் காலமாகச் செயறடபடுகின்றனர். இன்று சட்டபடி வேலை என்கிறனர். நாளை வேலைநிறுத்தம் என்கிறனர். இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை. அதற்கும் ஒழுங்கமைப்பு இருக்கின்றது. இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கமானது தொழில்வாண்மையாளர்களை உள்ளடக்கியது. அதனால் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக 50, 60 பில்லியன் ரூபா நஷ்டத்தை சந்திக்கும் நிறுவனமாக உள்ளது. அதேநேரம் உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையும் கொவிட் 19 தொற்று அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த நிலையில் டொக்டர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துள்ளனர். அதேபோன்று நாமும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம். கொவிட் 19 தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ள சில தடுப்பூசிகளை மறை செல்சியஸில் வைத்திருக்க வேண்டும். அத்தோடு ஏனைய தடுப்பூசிகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். அதற்கு மின்சாரம் அத்தியாவசியமானது. மேலும் வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை சீராக முன்னெடுக்கவும் ஏனைய தொழிற்சாலைகள் அடங்கலாக உற்பத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் மின்சாரம் இன்றியமையாததது. இவ்வாறான சூழலில் மின்தடையை ஏற்படுத்துவதும் அதற்காக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் முன்னெடுப்பதாக அச்சுறுத்துவதும் எவ்விதத்திலும் பொறுத்தமற்றதல்ல. எந்தவொரு விடயத்திற்கும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும்.

'யுகதனவி' நிறுவனத்திடம் நாம் மின்சாரம் கொள்வனவு செய்பவர்களாவர். அது ஒரு தனியார நிறுவனமாகும். அதன் பங்குகளை அந்நிறுவனம் வேறொரு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குள்ளது. அதனால் இது தொடர்பில் இப்போதைக்கு எம்மால் எதுவும் கூற முடியாது என்றும் கூறினர்.

மர்லின் மரிக்கார்

Tue, 12/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை