சுனாமி அச்சத்தால் மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம்

இந்தோனேசியாவின் தென் சுலவேசி மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவான பூகம்பத்தை அடுத்து மக்கள் வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு வெளியேறினர்.

உள்ளூர் நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை ஒன்பது மணி அளவில் புளோரசல் கடல் பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இது கிழக்கு நுசா டெங்கரா பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிப்புகள் மற்றும் பெரும் சேதங்கள் பற்றிய செய்திகள் வெளியாகாதபோதும் இந்த பூகம்பம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பின்னர் அது நீக்கப்பட்டது. மகாரா நகரைச் சேர்ந்த மக்கள் கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து ஒட்டம் பிடிக்கும் வீடியோக்கள் சமூகதளங்களில் வெளியாகியுள்ளன. இதன்போது மருத்துவமனை மற்றும் ஹோட்டல் ஒன்றில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் பீதியில் இருந்ததாக லரன்டுகா நகர குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். “அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர். தமது வீடுகளை விட்டு வெளியே ஓட்டம்பிடித்தனர்.

சிலர் ஏற்கனவே மலைகளை நோக்கி ஓடினார்கள்” என்று குடியிருப்பாளரான டக்திர் என்பவர் பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பெரும்பாலான மக்கள் தற்போது தமது வீடுகளுக்கு திரும்பிவிட்டதாகவும் சுனாமி ஒன்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமேரு எரிமலை வெடித்து குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டு 10 நாட்களின் பின்னரே இந்த பூகம்பம் இடம்பெற்றுள்ளது.

Wed, 12/15/2021 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை