எத்தியோப்பியாவில் ஐ.நா உணவு உதவிகள் நிறுத்தம்

உலக உணவுத் திட்டத்தின் களஞ்சியங்களை ஆயுததாரிகள் கொள்ளையடித்ததை அடுத்து வடக்கு எத்தியோப்பியாவின் இரு நகரங்களுக்கான உணவு உதவி விநியோகத்தை அந்த அமைப்பு இடைநிறுத்தியுள்ளது.

கொம்போல்கா மாவட்டத்தில் உள்ள நகரில், டிக்ரயான் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள் உதவி ஊழியர்களை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

கொள்ளை இடம்பெற்ற நாட்களில் தமது ஊழியர்கள் தீவிர அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக உலக உணவுத் திட்டத்தை முன்னெடுக்கும் ஐ.நாவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

'ஆயுதம் ஏந்திய படைகளினால் செய்யப்படும் இவ்வாறான தொந்தரவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதது. அத்தியாவசிய தேவையின்போது உதவிகளை வழங்கும் ஐக்கிய நாடுகள் மற்றும் எமது மனிதாபிமான கூட்டாளிகளின் திறனை இது மழுங்கடிப்பதாக உள்ளது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக உணவுத் திட்டத்தின் மூன்று மனிதாபிமான டிரக்குகளை கையகப்படுத்தி அரச துருப்புகள் அவைகளை தமது சொந்தத் தேவைக்கு பயன்படுத்துவதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.

அவர்கள் பெரும் அளவான அத்தியாவசிய உணவு பொருட்களை திருடிச் சென்றிருப்பதோடு இதில் ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறுவர்களுக்கான உணவுகளும் அடங்கும்.

டிக்ரயான்கள் மற்றும் அரச படைக்கு இடையில் தற்போது இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் வடக்கு எத்தியோப்பியா பெரும் பட்டினி நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது.

ஒரு ஆண்டுக்கு மேலாக மோதல்கள் இடம்பெறும் நிலையில் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தேவையாக இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

Fri, 12/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை