இந்திய மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் டக்ளஸின் உறுதிமொழியை அடுத்து கைவிடுகை

ஜனாதிபதி, பிரதமருடன் பேசி தீர்வை விரைவாக பெற்றுத்தருவதாக டக்ளஸ் தேவானந்தா உறுதியளிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசி தீர்வைப் பெற்று தருவேனென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி மொழி வழங்கியதையடுத்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் தமது போராட்டத்தை கைவிடுவதாக நேற்று தெரிவித்தனர். தமிழக மீனவர்களின் இழுவைப்படகுகளுடனான அத்துமீறல்களை கண்டித்து , யாழ்.மாவட்ட மீனவர்கள் நேற்று மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை யாழ். மாவட்ட செயலகம் முன்பாக நடத்தினர்.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலிலிருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ். மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்ததுடன் அங்கு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை வழி மறித்து சில மணிநேரம் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனால் போக்குவரத்து சில மணி நேரம் தடைப்பட்டிருந்தது. போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேசி தீர்வைப் பெற்று தருவேனென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார். அமைச்சரின் உறுதி மொழியையடுத்து யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்தே யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

“அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்”, “நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது”, “கைப்பற்றிய படகுகளைப் விடக்கூடாது” போன்ற பல்வேறு கோஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது எழுப்பப்பட்டன.

யாழ்.விசேட, யாழ்.குறூப் நிருபர்கள்

 

 

Sat, 12/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை