விரைவான இழப்பீட்டுக்கு பாக். அரசிடம் இலங்கை கோரிக்கை

பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் கலகக்கார கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கான நிதிப் பாதுகாப்பு மற்றும் இழப்பீடு தொடர்பில் பேசுவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், இலங்கைக்கான பதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை சந்தித்துள்ளார்.

மதநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கலகக்கார கும்பலால் கடந்த டிசம்பர் 3ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் உடல் மீது தீயிடப்பட்டது.

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதியாக நம்புவதாக ஜீ.எல் பீரிஸ் குறிப்பிட்டார் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரேஷி தம்முடன் தொலைபேசியில் பேசியதை ஞாபகமூட்டிய ஜி.எல் பீரிஸ், “அவர் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு இந்த விவகாரம் தொடர்பான அனைத்து விபரங்களையும் இலங்கைக்கு முன்கூட்டியே வழங்குவதற்கு உறுதி அளித்தார்” என்று குறிப்பிட்டார்.

சியல்கோட் வர்த்தக சமூகம் நன்கொடையாக 100,000 அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும், பிரியந்த குமாரவின் விதவை மனைவிக்கு மாதாந்த சம்பளத்தை வழங்குவதாகவும் அளித்திருக்கும் வாக்குறுதியை அவர் பாராட்டி உள்ளார். இந்த பணங்கள் நேரத்திற்கு கிடைப்பது மற்றும் பிரியந்த குமாரவின் இரு பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்துவதாகவும் ஜீ.எல் பீரிஸ் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

இந்த குடும்பத்திற்கு இடையூறு இன்றி மாதாந்த சம்பளம் கிடைப்பதற்கான பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Thu, 12/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை