“ஒரே நாடு ஒரே சட்டத்துக்கு கிழக்கு மக்களிடையே உயர் வரவேற்பு”

“ஒரே நாடு ஒரே சட்டத்துக்கு கிழக்கு மக்களிடையே உயர் வரவேற்பு”-One Country One Law Gnanasara Thero at Eastern Province

'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணிக்கு, கிழக்கு மாகாண மக்களின் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஒரே நாடு ஒரே சட்டத்துக்காக” பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிதல் நேற்று (04) மட்டக்களப்பு பிரதேச செயலகம் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக அலுவலக கேட்போர்கூடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

பௌத்த தேரர்கள், மதத் தலைவர்கள், தொழிற்றுறையினர், சமூக செயற்பாட்டாளர்கள் நீண்டகாலமாக பிரதேசத்தில் நிலவி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தனர். ஆலோசனைகள் வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் குழுவினரிடம் முன்வைக்கப்பட்டன.

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதியின் செயலணியினர் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு கிழக்கு மாகாணத்துக்கு வருகை தந்தமை, மாகாண மக்களுக்கு வழங்கிய கௌரவமாகுமென்று அவர்கள் தெரிவித்தனர்.

பதுரியா ஜூம்மா பள்ளி – காத்தான்குடி – 06, கல்முனைப் பள்ளி, கடற்கரைப் பள்ளி உள்ளிட்ட பிரதேசத்தின் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செயலணியின் உறுப்பினர்களை அழைத்துச் சென்று சுமூகமாக கலந்துரையாடினர். அங்கு விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றதுடன், ஆசிர்வாதமும் அளிக்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த செயலணியின் தலைவர் ராஜகீய பண்டித சங்கைக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகையில், நீண்டகாலமாக நிலவி வருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக தற்போதைய ஜனாதிபதி அவர்கள் நேர்மையாக முயற்சிப்பதாகவும் உண்மையான அமைதி, நல்லிணக்கத்தை எதிர்பார்க்கின்ற பௌத்த தேரர்கள், தமிழ் பூசகர்கள், முஸ்லிம் மௌலவிமார்கள், கிறிஸ்துவ பாதிரிமார்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தலைவர்களும் ஒருசேர ஒரே நாடு ஒரே சட்டத்தைக் கேட்டு, இச்சந்தர்ப்பத்தில் முன்னின்று செயற்பட வேண்டுமென தேரர் அவர்கள் குறிப்பிட்டார். இன்று நாம் அனுபவிக்கின்ற வேதனைகளை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கக்கூடாதென்றும் தெளிவுபடுத்தினார்.

“இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற எண்ணக்கருவை செயற்படுத்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்களை கருத்திற்கொண்டு, அவ் எண்ணக்கருக்களை ஆய்வு செய்ததன் பின்னர் அதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் சங்கைக்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிதல் வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் பின்னர் மூன்று நாட்களாக இடம்பெற்ற கிழக்கு மாகாணத்தின் கருத்துக்களை கேட்டறிதல் இன்றுடன் நிறைவுபெறுகின்றது. எதிர்காலத்தில் ஏனைய மாகாண மக்களினதும் கருத்துக்கள் கேட்டறியப்படும்.

இச்சந்தர்ப்பத்தில் செயலணியின் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க மற்றும் குழுவின் ஏனைய அங்கத்தவர்களான பேராசிரியர் ஷாந்தி நந்தன விஜேசிங்க, சிரேஷ்ட விரிவுரையாளர் சுமேத வீரவர்தன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே, எரந்த நவரத்ன, பானி வேவல, ஐயம்பிள்ளை தயானந்தராஜா, யோகேஸ்வரி பற்குணராஜா, சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
05.12.2021

Sun, 12/05/2021 - 20:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை