பூஸ்டர் தொடர்பான வதந்திகளை நம்பாது விரைவாக பெறுங்கள்

விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த

 

ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான தலைமுறையொன்றை உருவாக்குவதற்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மிகவும் முக்கியமானதாகும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பூஸ்டர் எனப்படும் மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தடுப்பூசி தொடர்பில் சமூகத்தில் பலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், அவற்றில் பல உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ரீதியில் இந்த தொற்றுநோய் இன்னும் ஒரு புதிய அனுபவமாக இருப்பதாகவும், கொவிட் தொற்று தொடர்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட் வைரஸுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான அண்மைய பரிசோதனைகளில் நேர்மறையான முடிவுகள் கிடைத்தாலும் அவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அவற்றின் செயற்திறன் தொடர்பில் நிபுணர்களினால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தனிநபர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக, அனைத்து நாடுகளிலும் வழங்கப்படும் மூன்றாவது தடுப்பூசியை இலங்கையிலும் வழங்குவதற்கு தொற்று நோய்கள் தொடர்பில் ஆராயும் குழுவினால் சுகாதார அமைச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இலங்கையில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட 2 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கு செயலூக்கி (பூஸ்டர்) தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன், தொழிற்சாலைகள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் 18 வயது பூர்த்தியானோருக்கு நிறுவன ரீதியாக வழங்கப்படும் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Tue, 12/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை