கொவிட் தொற்றுக்கு பின்னரான பொருளாதார மீட்புக்கு பிராந்திய நாடுகளுக்கிடையே இணைந்த செயற்பாடு அவசியம்

வல்லரசு நாடுகளின் ஒத்துழைப்பு வறிய நாடுகளின் சவால்களுக்கு உந்து சக்தி

அபுதாபியில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உரை

தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பிராந்தியத்திலுள்ள அனைவரும் ஒன்றிணைந்துச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று முன்தினம் (04) மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப உரையை நிகழ்த்தும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிகப்படியான உயிர்களைக் காப்பாற்றுவது என்பதை விலை மதிக்க முடியாவிட்டாலும், தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக அதிக செலவை ஏற்கவேண்டி  ஏற்பட்டுள்ளது. பொருளாதாரச் செயற்பாடுகளின் மந்தகதியால், உலகளாவிய சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன என்று தெரிவித்த ஜனாதிபதி , அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வல்லரசு நாடுகளால் வழங்கப்படும் ஒத்துழைப்புகளால் மாத்திரமே, அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றார்.

அனைத்துப் பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் வரையில், கொவிட் – 19 தொற்றுப் பரவல் இல்லாமல் போகப்போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி , அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, வல்லரசு நாடுகள் உதவி புரிய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

உலகளாவிய தொற்றுப் பரவலைத் தடுக்கும் வேலைத்திட்டத்துக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலைமைத்துவம் வழங்கி வருகின்ற போதிலும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பொருளாதார மீட்சிக்கு, எந்தவோர் உலக அமைப்பும் உதவ முன்வரவில்லை. தொற்றுப் பரவலென்பது, வறிய மற்றும் வல்லரசு நாடுகளை ஒரே விதத்தில் பாதிப்படையச் செய்திருப்பினும், விகிதாசாரப் பாதிப்பின் சுமைகளை வறிய நாடுகளே தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கடனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களுக்கு இது மிகவும் கடினமான சந்தர்ப்பமாகுமென்றார்.

தொற்றுநோய் அனுபவத்தின்படி, ஒரு நாட்டில் உள்ள பாதகமான நிலைமைகள், விரைவாக பிராந்தியத்துக்கும் இறுதியில் உலகம் முழுவதும் பரவக்கூடும். அதனால்தான், தொற்றுநோய்கள், பொருளாதாரம் அல்லது சூழலியல் விடயங்களில் நாடுகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. தொற்றுநோய்கள், பொருளாதாரம் அல்லது சூழலியல் தொடர்பாக நாடுகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் இணைந்து செயற்பட வேண்டும். மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சவால்களில் ஒன்றாக தற்போதைய காலநிலை நெருக்கடி காணப்படுகிறது என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

மனிதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும், இவ்வாறானதொரு நடவடிக்கையும் ஒருங்கிணைவும், ஒத்துழைப்புமே அவசியமாகவுள்ளது என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு தற்போது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும், இவ்வாறான ஒருங்கிணைப்பே தேவைப்படுகின்றது என்றும் இது தொடர்பில் மிகக் கவனமாகக் கண்காணித்து இல்லாதொழிக்கவில்லையாயின், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்றன சுலபமாக இன்னுமோர் இனத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டார்.

18 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள், 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இருநூறுக்கும் அதிகமான பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர், இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.

Mon, 12/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை