பாராளுமன்ற ஆலோசனை குழுக் கூட்டம் இன்று

அனைத்து கட்சித்தலைவர்களுக்கும் அழைப்பு

பாராளுமன்றத்தில் தினமும் தொடரும் சமையல் எரிவாயு சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனை நடத்த திட்டம்

 

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு விவகாரம் தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்றைய தினம் விசேட பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சமையல் எரிவாயு விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேற்படி சர்ச்சையையடுத்து சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, சமையல் எரிவாயு விவகாரம் பூதாகரமாகியுள்ளதால் விசேட பாராளுமன்ற ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்து அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை பெற்று அதற்கு நிவர்த்தி காணப்படவேண்டுமென்று சபையில்  கேட்டுக்கொண்டார். அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன,

இந்த பிரச்சனை சமூகத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மக்களின் உயிர்களை பாதுகாப்பதில் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். அதற்கிணங்க பாராளுமன்ற ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்து இன்றைய தினம் அந்த குழு கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதியை அமைச்சர் லசந்த அழகியவண்ணவுக்கு சபாநாயகர் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சபாநாயகர் அதற்கான அனுமதியை நேற்று வழங்கியதையடுத்து இன்றைய தினம் காலை 9 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத்தில் அந்த ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண:

இது நாட்டிலுள்ள 40வீதமான குடும்பங்களில் நிலவும் பிரச்சினை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பிரச்சினையால் வீடுகளில் மாத்திரமல்ல வர்த்தக நிலையங்கள் உணவகங்களில் இருப்பவர்களும் பெரும் அச்சத்துடனேயே உள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் நுகர்வோரின் பக்கமே உள்ளது. பொன்னறுவையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகவே பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவ்வாறில்லாமல் சிலிண்டரின் இரசாயன அளவில் மாற்றம் செய்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அவர்களின் அந்த மோசடிக்கு எதிராகவே நாம் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்ற உத்தரவுக்கமைய அந்த சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் இருந்து அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது 18லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டர் சந்தையில் இல்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்க முடியும். அதேபோன்று சமையல் எரிவாயு சிலிண்டரின் கலவையின் அளவில் 50க்கு 50மாற்றம் செய்திருந்தால் ஏன் சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறவில்லை என்பதே கேள்வியாக உள்ளது என்றார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை