வடக்கு கல்வியில் ஊழல் முறைகேடு தலைவிரித்தாடுகிறது

வடக்கு கல்வியில் ஊழல் முறைகேடு தலைவிரித்தாடுகிறது-Corruption in Northern Province Education

- புதிய ஆளுநரும் நடவடிக்கை இல்லையென ஆசிரியர் சங்க உப தலைவர் குற்றச்சாட்டு

வடமாகாண கல்வி நிர்வாக முறைகேடுகள் ஊழல், இலஞ்சம் என்பன பல வருடகாலமாக விசாரிக்காமல் மூழ்கடிக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தீலீசன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

யாழ் மத்திய கல்லூரியில் நேற்று (18) இடம்பெற்ற அதிபர்,  ஆசிரியர்கள் உடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பல்வேறுபட்ட ஊழல் நிர்வாக முறைகேடுகள் பற்றி அப்போதிருந்த ஆளுநர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.

எல்லோரும் ஆதாரங்களை தாருங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என ஆதாரங்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டனர்.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனிடம் பல்வேறு தடவைகள் இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு மாகாண கல்வியில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் எழுத்து மூலம் தெரியப்படுத்தி இருந்தோம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆரம்ப பாடசாலை மற்றும் பிரபல பெண்கள் பாடசாலைகளில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் எழுத்து மூலம் தெரியப்படுத்தி இருந்தோம்.

அதுமட்டுமல்லாது தீவக வலயத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் அதிபரால் தொடர்ச்சியாக ஆசிரியர்கள் நெருக்கடிக்கு உள்ளாகிய தொடர்பிலும் பல தடவைகள் எடுத்துக் கூறினோம்.

ஆனால் இதுவரை வடக்கு மாகாண கல்வியமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விசாரணை என்ற போர்வையில்  சாட்சியங்களை மட்டும் பெற்றுக்கொண்டடமை மட்டும் இடம்பெற்றது.

தற்போது புதிய ஆளுநர் வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட நிலையில் அவரிடமும் தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்து வடக்கு கல்வித் துறையில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் என்பது தொடர்பில் எழுத்துமூலம் தெரியப்படுத்தினோம்  நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆகவே வடக்கு கல்வித்துறை பின்னோக்கி செல்கிறது என பலரும் கூறும் நிலையில் வடக்கு கல்வியில் இடம்பெற்ற ஊழல் நிர்வாக முறைகேடுகளை சீர்படுத்த வரை முன்னோக்கி செல்ல முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் குறூப் நிருபர்

Sun, 12/19/2021 - 10:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை