பாராளுமன்றில் மு.கா எம்.பிக்கும் சந்திரகாந்தனுக்குமிடையில் தர்க்கம்

பிரச்சினைக்குதீர்வு காண்பதாக அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ உறுதி

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாக கட்டமைப்பில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக பிரிவுகளில் முஸ்லிம் கிராமங்களின் எல்லைகள் விஸ்தீரணங்களில் திட்டமிட்ட முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு முஸ்லிம்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பி. ஹாபிஸ் நஸீர் அஹமட்டினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணையின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்பி.யுமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்குமிடையில் தர்க்கம் ஏற்பட்டது.

கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மற்றும் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் என்பன தொடர்பிலேயே இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஹரிஸ் எம்.பி. ஆகியோரும் உரையாற்றியிருந்தனர். திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களின் காணிகள், நிலங்கள், ஆளுகை எல்லைகள் கபளீகரம் செய்யப்படுவதாக இவர்கள் சபையில் சுட்டிக்காட்டியதுடன், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர்களாக இருந்தவர்கள் மீதும் மாவட்ட செயலகம் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இந்த பிரேரணை மீது விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உரையாற்றும்போதே தர்க்கம் ஏற்பட்டது. சந்திரகாந்தன் எம்.பி. பேசுகையில், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் வாழைச்சேனை தொடர்பில் கொண்டு வந்த பிரேரணை அப்பட்டமாக இனவாத ரீதியானது. இந்த பிரேரணையை கொண்டு வந்த எம்.பி.க்கள் எவரும் வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் அல்ல. நான் அங்கு பிறந்து வளர்ந்து அரசியல் செய்பவன்.

இதன்போது இடையில் எழுந்த நசீர் எம்.பி. நானும் மட்டக்களப்பை சேர்ந்தவன் தான் எனக்கூறி மேலும் ஏதோ கூற முற்பட சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் அதற்கு இடமளிக்க வில்லை. இதேபோன்று ஹரீஸ், ஹக்கீம் எம்.பி.க்களும் இடையிடையில் சில கருத்துக்களை முன்வைத்துக்கொண்டிருந்தனர்.

இறுதியில் இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ, மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூர் நிர்வாகத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய குழுவின் ஊடாக தீர்வை காணமுடியும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 12/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை