ஒமிக்ரோன் கொவிட் திரிபு: ஐரோப்பாவில் நெருக்கடி

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு ஐரோப்பாவில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்தப் பிராந்திய தலைவர்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்தி வருகிறனர்.

ஜெர்மனி மற்றும் போர்த்துக்கல் உட்பட நாடுகள் கிறிஸ்மஸுக்கு பின்னரான கட்டுப்பாடுகள் பற்றி அறிவித்திருப்பதோடு தீவிர சமூக இடைவெளி கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்படவுள்ளன.

ஒமிக்ரோன் ஐரோப்பாவின் பல நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக ஏற்கனவே உருவெடுத்துள்ளது.

இந்த அதிகரிப்பு சுகாதார அமைப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரியான ஹான்ஸ் குலுக் எச்சரித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்தில் 53 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் 38 நாடுகளில் ஒமிக்ரோன் திரிபு பரவியுள்ளது. அதிலும் பல நாடுகளில் ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கைதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு கொரோனா அலை வந்து கொண்டிருக்கிறது, கணிசமான அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும், அரசாங்கங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என ஹான்ஸ் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் வரும் டிசம்பர் 28 ஆம் திகதி தொடக்கம் தனிப்பட்ட ஒன்றுகூடல்களை 10 பேருக்கு மட்டுப்படுத்தி இருக்கும் ஜெர்மனி இரவு விடுதிகளையும் மூடவுள்ளது. அந்தத் திகதியில் இருந்து மூடப்பட்ட அரங்குகளிலேயே கால்பந்து போட்டிகளும் நடைபெறும்.

இதேவேளை டிசம்பர் 26 ஆம் திகதி தொடக்கம் இரவு விடுதிகளை மூடுவதற்கு போர்த்துக்கல் உத்தரவிட்டிருப்பதோடு, ஜனவரி 9 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து வேலை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நெதர்லாந்தில் முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டிருப்பதோடு சுவிட்சர்லாந்திலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஐரோப்பிய வட்டாரத்தில் கடந்த வாரம் 27,000 பேர் நோய்த்தொற்றால் உயிரிழந்தனர். மேலும் 2.5 மில்லியன் பேருக்குக் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டது.

அது கடந்த ஆண்டின் அதே காலக்கட்டத்துடன் ஒப்புநோக்க 40 வீதம் அதிகம் என்பதை டாக்டர் ஹான்ஸ் குறிப்பிட்டார்.

Thu, 12/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை