முன்னர் காணாத வேகத்தில் பரவிவரும் ‘ஒமிக்ரோன்’திரிபு

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

முன்னெப்போதும் காணாத வேகத்தில் ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிக எண்ணிக்கையான மரபணு பிறழ்வைக் கொண்ட இந்தத் திரிபு தற்போது 77 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் கண்டுபிடிக்கப்படாது மேலும் பல இடங்களில் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்தார்.

இந்த திரிபை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது பற்றி மருத்துவர் டெட்ரோஸ் கவலை தெரிவித்தார்.

“கொரோனா வைரஸை குறைத்து மதிப்பிடுவதை நாம் இப்போது அறிந்து கொண்டோம். ஒமிக்ரோன் திரிபு குறைந்த அளவுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தினாலும், நோயாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து, தயாராக இல்லாத சுகாதார அமைப்புகளை மீண்டும் நிறைத்துவிடும்” என்று அவர் கூறினார்.

ஒமிக்ரோன் திரிபு முதன்முதலில் தென்னாபிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது, அப்போதிலிருந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஒமிக்ரோன் தோன்றியதிலிருந்து தென்னாபிரிக்காவையும் அதன் அண்டை நாடுகளையும் பாதிக்கும் வகையில் பல நாடுகள் பயணத் தடைகளை அறிமுகப்படுத்தின, அந்நடவடிக்கைகள் ஒமிக்ரோன் திரிபு உலகம் முழுவதும் பரவுவதைத் தடுக்கவில்லை.

செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட, உலக நாடுகள் மத்தியில் உள்ள நியாயமற்ற தடுப்பூசி விநியோகம் தொடர்பான கவலைகளையும் வெளிப்படுத்தினார் டெட்ரோஸ்.

41 நாடுகள் தமது மக்கள் தொகையில் இன்னும் 10 வீதமானவர்களுக்குக் கூட தடுப்பூசி வழங்க முடியாத நிலையில் இருப்பதோடு 98 நாடுகள் இன்னும் 40 வீதத்தைக் கூட எட்டவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Thu, 12/16/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை