அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் தவறானவை 

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் கிடையாது எனவும் அது தொடர்பான எதிர்க்கட்சியினரின் கூற்று தவறானது என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

நாட்டில் 663அத்தியாவசிய மருந்துகள் உள்ளதாகவும் அவற்றில் 15மருந்துகளுக்கான குறைபாடுகள் நிலவுகின்ற நிலையில் 8மருந்துகளுக்கு பதில் மாற்று மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர் அடுத்த வாரமளவில் மேலும மருந்துகள் நாட்டுக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அந்த வகையில் நாட்டில் பெருமளவு அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் கூற்றுக்களில் எந்தவித உண்மையும் கிடையாது என்றும் அவர் சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 

அடுத்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் 25 ஒசுசல கிளைகளை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   அதேவேளை, உள்நாட்டில் மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவதன் மூலமாக 5 பில்லியன் ரூபா நிதியை மீதப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள தேசிய மருந்து சட்டத்தை திருத்த மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   அரசாங்க வைத்தியசாலைகளில் பெருமளவு மருந்துகள் வீணாகின்றன. அவற்றை முகாமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்மூலம் 15 பில்லியன் வரையிலான நிதியை மீதப் படுத்த முடியும். உலக வங்கியின் நிதி உதவியுடன் எதிர்வரும் வருடத்தில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.   நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது. நாட்டில் 84 வீதமான மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.அதற்கிணங்கவே எமது நாட்டில் மரணங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம் 

 

Wed, 12/01/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை