தாதியர்,குடும்பநல அதிகாரிகள் அவசியம்

சுகாதார சேவைகளை மலையகத்துக்கும் விஸ்தரித்து தோட்ட மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும். தமிழ்பேசும் குடும்பநல உத்தியோகத்தர், தாதியர் நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றிய அவர், மேலும்குறிப்பிடுகையில்,

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தோட்ட மக்களின் சுகாதார மேம்பாட்டுக்கு  பங்களிப்பாரென நம்புகிறோம். பங்கரகம பகுதியில் 1,000 ற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். முரத்தலாவில் 6,000 ற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். ஹாலிஎல போன்ற பகுதிகளில் வைத்தியசாலை கிடையாது.அனைவரும் பதுளை போன்ற பகுதி வைத்தியசாலைக்கு வரவேண்டும்.பெரிய நெரிசல் அங்கு காணப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் சிந்தித்து செயற்பட வேண்டும்.

இப்பகுதிகளில் சுகாதார சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாகாண சுகாதார சேவை என பார்க்காது மலையக பகுதிகளுக்கும் சுகாதார சேவைகளை மலையகத்தில் விஸ்தரிக்க வேண்டும். மொழிப்பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு அந்த மக்கள் முகம்கொடுத்துள்ளனர். தமிழ்பேசும் குடும்பநல உத்தியோகஸ்தர்கள் தாதியர்களை அரசு நியமிக்க வேண்டும். தகுதியான கற்ற பெண்கள் இங்குள்ளனர்.

மலையகத்திலுள்ள தோட்ட ஆஸ்பத்திரிகளை பொறுப்பேற்க கடந்த அரசாங்கத்தில் தீர்மானிக்கப்பட்டது. அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டது ஆனால் அதனை தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

லோரன்ஸ் செல்வநாயம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை