சிலி ஜனாதிபதி தேர்தலில் போராட்ட தலைவர் வெற்றி

அரச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெப்ரியேல் போரிக் அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் 35 வயதான போரிக் 56 வீத வாக்குகளை வென்றிருப்பதோடு, அவரது பழைமைவாத போட்டியாளரான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் 44 வீத வாக்குகளையே பெற்றார்.

இதன்மூலம் சிலியின் இளம் ஜனாதிபதியாக போரிக் பதிவாகியள்ளார்.

சிலியில் பாரிய அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னரே இந்த தேர்தல் இடம்பெற்றது. இதில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் அரசில் இடம்பெறாத அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருந்தனர்.

பதவியில் இருந்து வெளியேறும் தற்போதைய ஜனாதிபதி செபஸ்டியன் பினேரே, வெற்றி பெற்றிருக்கும் போரிக்கிற்கு தமது ஆதரவை வெளியிட்டார்.

முன்னாள் மாணவர் போராட்டத் தலைவரான போரிக், 2019 மற்றும் 2020இல் சிலியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆதரவாக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்காவின் ஸ்திரமான பொருளாதாரமாக இருந்த சிலி, உலகின் மிகப்பெரிய வருவாய் இடைவெளி கொண்ட நாடுகளில் ஒன்றாகும். அங்கு மக்கள் தொகையில் ஒரு வீதத்தினரிடம் நாட்டின் 25 வீதமான செல்வம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.

இந்த ஏற்றத்தாழ்வை சீர் செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கும் போரிக், சமூக உரிமைய மேம்படுத்துவது மற்றும் ஓய்வூதியம் மற்றும் சுகாதார அமைப்பில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது, அதேபோன்று வேலை வாரத்தை 45 இல் இருந்து 40 மணி நேரமாக குறைப்பது மற்றும் பசுமை முதலீடு பற்றி வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

Tue, 12/21/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை