நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள்

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போமென காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றுக் காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும் அவர் கள் தெரிவிக்கையில்,

எமது உறவுகளின் உண்மைநிலையை வலியுறுத்தி மூன்று வருடங்களுக்கும் மேலாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

எனினும் எமக்கான நீதியை எந்த ஒரு அரசாங்கமும் வழங்கவில்லை. எமது உறவுகளை தருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை. எனவே எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடை நிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், எங்கே எங்கே உறவுகள் எங்கே, நிதி வேண்டாம் நீதியே வேண்டும், ஓஎம்பியை திணிக்காதே, பாடசாலை சென்ற மாணவர்கள் எங்கே, அரசின் பொறுப்பற்ற பதில்களை கண்டிக்கின்றோம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், கோஷங்களையும் எழுப்பினர்.

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை