இலங்கையரின் உயிரைக் காக்க போராடிய சக ஊழியருக்கு பாகிஸ்தான் உயரிய விருது

சம்பவம் தொடர்பில் மேலும் எழுவர் கைது

பாகிஸ்தானில் கலகக்கார கும்பலால் படுகொலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமாரவை தமது உயிரை பணயவைத்து காப்பற்ற முயன்ற மாலிக் அத்னன் என்பவருக்கு பாகிஸ்தானின் உயரிய குடிமகனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரவின் சக ஊழியரான அத்னன், பாதிக்கப்பட்டவரை உடல் ரீதியில் பாதுகாக்க முயற்சித்து தனது உயிரை பணயவைத்ததற்காக தங்கா இ ஷுஜாத் அல்லது “துணிச்சலுக்கான பதக்கம்” வழங்கப்படும் என்று பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் வடகிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் சியல்கோட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை கலகக்கார கும்பலால் தாக்கிக் கொல்லப்பட்ட குமாரவின் உடல் பின்னர் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகத்தில் வெளியான வீடியோக்களில் கலகக் கும்பலிடம் இருந்து இலங்கையரை பாதுகாக்க அத்னன் போராடுவது தெரிகிறது. எனினும் நூற்றுக்கணக்கான கலகக்காரர்கள் முன் அவரது முயற்சி வெற்றி அளிக்கவில்லை.

இதன்போது இந்த கும்பலைச் சேர்ந்த சிலர் “இன்று அவர் (குமார) தப்பிக்க முடியாது” என்று கூச்சலிடும் நிலையில் குமார அத்னனின் கால்களை பற்றிக்கொள்ள அத்னன் தனது உடலால் அவரை பாதுகாக்க முயல்வது வீடியோவில் தெரிகிறது.

“பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பதற்கு தனது உயிரை பொருட்படுத்தாது உடலால் முயன்றது உட்பட கலகக்கார கும்பலிடம் இருந்து பிரியந்த திசாநாயக்கவுக்கு அடைக்கலம் வழங்கி பாதுகாக்க முயன்ற மலிக் அத்னனின் தைரியம் மற்றும் துணிச்சலுக்கு தேசத்தின் சார்பில் நான் மரியாதை செலுத்துகிறேன். அவருக்கு நாம் தங்கா இ ஷுஜாத் விருதை வழங்கவுள்ளோம்” என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புபட்டு நேற்று திங்கட்கிழமை மேலும் ஏழு பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது.

சந்தேக நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக பஞ்சாப் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Tue, 12/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை