இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்த திட்டமிட்ட திரிபுபடுத்திய செய்தி

இராணுவத் தலைமையகம் விளக்கத்துடன் விரிவான அறிக்கை

 

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் புனைகதைகளில் இருந்து உண்மைகளை வேறுபடுத்தி அறியுமாறு இலங்கை இராணுவம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர் ஒருவர் மீது படையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் தொடர்பில் இலங்கை இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் மீது படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்து இலங்கை இராணுவம் மற்றும் அதன் இராணுவப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.  இதனையடுத்து இராணுவத் தளபதியின் அறிவுறுத்தல்களுக்கமைய மேற்படி சம்பவம் இடம்பெற்ற சில மணித்தியாலங்களில் அதாவது 2021 நவம்பர் 27ஆம் திகதி அந்த இடத்தில் கடமையாற்றிய 682 படைப்பிரிவு படையினரிடம் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பல்வேறு சமூக ஊடக தளங்கள் மற்றும் நாட்டின் சில அச்சு ஊடகங்கள் என்பன இந்த சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத, உறுதிப்படுத்தப்படாத மிகைப்படுத்தப்பட்ட மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டன.

உண்மையில், படை வீரர் ஒருவர், முள்ளிவாய்க்கால் பெயர் பலகையுடன் இணைந்ததாக இராணுவத்தினரை ஏன் படம் பிடிக்கிறீர்கள் என ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு கேள்வி எழுப்பியவாறு அந்த இராணுவ வீரர் குறிப்பிட்ட ஊடகவியலாளரை நோக்கி செல்ல முற்பட்டதும், அவர் அந்த படைவீரர்களுடன் கதைத்தவாறு பின்னோக்கிச் சென்றுள்ளார், இவ்வாறு பின்னோக்கிச் சென்றவேளை, திடீரென்று பெயர் பலகையில் இருந்து சில மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த தனது சொந்த மோட்டார் சைக்கிளின் மீது மோதி, கம்பி வேலி பொருத்தப்பட்டிருந்த இடத்தில் விழுந்தார். சேற்று நிலப்பகுதியில் விழுந்த அவரது கைகள் 'காயமடைந்து' இருப்பதை அவதானித்தார்.

இவர் இவ்வாறு விபத்துக்குள்ளாகி காயமடைந்த சில நொடிகளில், அவரது கையடக்க தொலைபேசியின் ஊடாக செய்தியை எதிர்பார்த்துக் காத்திருந்த பல குழுக்கள் வீடியோ கேமராக்கள் மற்றும் மொபைல் போன்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த நபரை பாசாங்குத்தனமாக அந்த இடத்தில் படுக்கச் செய்துள்ளனர்.

இது படைதரப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்ட சதி என வெளிச்சத்திற்கு வந்தது.

வீதியோரத்திலுள்ள பெயர் பலகையை படமெடுக்கும் போது அந்த இடத்தில் இருந்த இராணுவ வீரர்களால் அவர் 'மிருகத்தனமாக' தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டார் என்று கூறும் அளவுக்கு படப்பிடிப்பிற்கான காட்சிகள் எடுக்கப்பட்டன. மேலும் அவர்கள் உடனடியாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து, அந்த நபரை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அன்றைய தினம் (27) காலை அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு சீறல் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதன்மை சாட்சியத்தின் பேரில், அந்த இடத்தில் பணியில் இருந்த மூன்று இராணுவ வீரர்களையும் பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களை பிணையில் விடுவித்தனர். இதற்கிடையில், மேற்படி ஊடகவியலாளர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர், ஞாயிற்றுக்கிழமை (28) வெளியிடப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் மருத்துவ-சட்டப் பரிசோதனை அறிக்கை, இந்த ஊடகவியலாளர் 'சிராய்ப்பு' மற்றும் 'சிறு காயம்' என்பவற்றுக்கு மட்டுமே சிகிச்சை பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வறிக்கை 'முட்கம்பியால் சுற்றப்பட்ட பனைக் குச்சியால் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்' என சர்வதேச விசாரணைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூற்றுக்கு இது முற்றிலும் மாற்றமாக அமைந்திருந்தது.

சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்ட 'பத்திரிகையாளர்கள்' இதுபோன்ற நடவடிக்கைகளினால் 'பத்திரிகையாளர்கள்' என்றழைக்கப்படுபவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க தயாராக உள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பாதுகாப்புப் படையினர், கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஆரோக்கியமான நல்லிணக்கம் மற்றும் நல்ல நல்லெண்ண உணர்வுகளின் சைகைகளின் காரணமாக, சந்தர்ப்பவாத மற்றும் இனவாத எண்ணம் கொண்ட சக்திகளால் ஏமாற்றப்படாமல் ஒரு நேர்மறையான முறையில் ஈர்க்கக்கூடிய வகையில் வளர்ந்துள்ளனர்.

வடக்கிலும் சரி, வேறு இடங்களிலும் சரி, தாம் சேவை செய்யும் அனைத்து இலங்கையர்களின் நலன்களுக்கான உண்மையான மற்றும் முழுமையான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தும் அதே வேளையில், பகுத்தறிவு மற்றும் அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும், இதுபோன்ற திரிபுபடுத்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் தீங்கிழைக்கும் நிகழ்வுகளை நம்பி ஏமாற வேண்டாம் என இராணுவம் கேட்டுக்கொள்கிறது.

அதற்கு பதிலாக, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திப் பாதையின் புதிய சகாப்தத்தை உருவாக்க ஒன்றாக கைகோர்க்குமாரு இராணுவம் வேண்டுகோள் விடுக்கின்றது.

 

ஸாதிக் ஷிஹான்

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை