ஹொன்டுராஸின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார் காஸ்ட்ரோ

ஹொன்டுராஸ் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியை ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக சியோமாரா காஸ்ட்ரோ நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 28 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி லிப்ரே கட்சியின் வேட்பாளரான காஸ்ட்ரோ தனது போட்டியாளரை விடவும் 20 வீத புள்ளிகளால் முன்னிலை பெற்றிருப்பதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

அவரது வெற்றி வலதுசாரி தேசிய கட்சியின் 12 ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதாக உள்ளது. அந்த ஆட்சி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி ஜனாதிபதி ஜுவான் ஓர்லன்டோ ஹெர்னான்டஸுக்கு பதிலாகவே காஸ்ட்ரோ புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹெர்னான்டஸின் சகோதரர் போதைக்கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் போதை வர்த்தகத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கு முகம்கொடுத்தார். “போதை சர்வாதிகாரம் மற்றும் ஊழல்” படுகுழியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதாக காஸ்ட்ரோ உறுதி அளித்துள்ளார்.

Thu, 12/02/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை