அமெரிக்கா சூறாவளி: உயிரிழப்பு உயர்வு; அவசர நிலை அறிவிப்பு

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100ஐ தாண்டக்கூடும் என்று அந்த மாநில ஆளுநர் கூறியிருப்பதோடு, உயிர் தப்பியோரை கண்டுபிடிக்கும் வாய்ப்பும் குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாநில வரலாற்றில் இடம்பெற்ற பேரழிவு கொண்ட சூறாவளியாக இது உள்ளது என்று குறிப்பிட்டிருக்கும் அதன் ஆளுநர் அன்டி பெஷயர், குறைந்தது 80 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

“சூறைக்காற்று நேரடியாக தாக்கிய பகுதிகளில் எதுவும் எஞ்யிருக்கவில்லை” என்று அவர் கூறினார்.

இந்த சூறாவளியால் ஏனைய மாநிலங்களில் மேலும் பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜனாதிபதி ஜோ பைடன், கென்டக்கியில், தேசிய அவசர நிலையை அறிவித்திருப்பதோடு மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசின் உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றி உயிர் தப்பியோரை தேடி வருகின்றனர். தவிர குடியிருப்பாளர்களுக்கு குடிநீர் மற்றும் மின்பிறப்பாக்கி வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 300க்கும் அதிகமான தேசிய காவல் படையைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.

“உயிர்தப்பியவர்களை கண்டுபிடிக்கும் அதிசயம் ஒன்றை நம்பி நாம் தொடர்ந்து இயங்கி வருகிறோம்” என்று மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றான மேய்பீல்டுக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் தெரிவித்தார்.

எனினும் கடந்த சனிக்கிமை காலை தொடக்கம் உயிருடன் எவரும் காப்பற்றப்படவில்லை.

இந்த சூறாவளி பயணித்த 227 மைல் தடத்தின் அனைத்து இடங்களும் அழிவடைந்திருப்பதாக ஆளுநர் கூறினார். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்திருக்கும் நிலையில் அதன் சரியான எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படவில்லை.

முன்னதாக 1925 மார்ச் மாதம் மிசூரியில் 219 மைல்கள் பயணித்த சூறாவளியே அமெரிக்காவில் நீண்ட தூரம் பயணித்த சூறாவளியாக இருந்தது. இதில் 695 பேர் உயிரிழந்தனர். எனினும் வசந்தம் அல்லது கோடை காலத்திற்கு அப்பால் இவ்வாறான இயற்கை அனர்த்தம் மிக அரிதானதாகவே பார்க்கப்படுகிறது.

மேய்பீல்ட் நகரில் தீயணைப்பு நிலையம் மற்றும் நகர மண்டபம் சூறாவளியால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இதில் 110 ஊழியர்கள் உள்ளே இருக்க சூறாவளி தாக்கியதாக நம்பப்படும் மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் எட்டு பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எட்டுப் பேர் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர்.

அமேசன் களஞ்சியம் ஒன்று உடைந்த நிலையில் இல்லினொயிஸில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல்போயிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

டென்னசியில் நால்வர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதோடு அர்கான்சாஸ் மாநிலத்தில் இருவர் பலியாகி உள்ளனர். இதில் ஒருவர் முதியோர் பராமரிப்பு இல்லம் ஒன்று பகுதி அளவு உடைந்ததில் பலியாகியுள்ளார். மிசுரியில் ஒருவர் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த சூறாவளிகளுக்கு காலநிலை மாற்றம் தாக்கம் செலுத்தியுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்யும்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனத்தை ஜனாதிபதி பைடன் கேட்டுள்ளார்.

அமெரிக்காவின் 6 மாநிலங்களில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் இந்த சூறாவளிகள் அடுத்தடுத்து தாக்கி இருந்தன.

Tue, 12/14/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை