நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை இந்துக்கள் பொறுமை காக்கவும்

சார்ள்ஸ் எம்பியின் கேள்விக்கு அமைச்சர் விதுர பதில்

வடக்கில் நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இந்துக்கள் பொறுமை காக்க வேண்டுமென தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தமது கேள்வியின் போது, நெடுங்கேணி பிரதேசத்திலுள்ள வெடுக்கு நாறிமலையில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக தொல்பொருள் திணைக்களம் நடத்த விடாமல் தடை செய்துள்ளது. அது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.

இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்கும் நோக்கமும் எமக்கு கிடையாது. ஆனால் தொல்பொருள் இடங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அதேவேளை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாடுகள் தொடர்பில் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே அந்த வழக்கு முடியும் வரை இந்துக்கள் பொறுமை காக்க வேண்டும். இலங்கையில் உள்ள தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்கும் உரிமை எம் அனைவருக்கும் உள்ளது என்பதனை தமிழ் எம்.பிக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் பொறுமையாக இந்த விடயங்களை கையாள்வது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Fri, 12/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை