உக்ரைன் எல்லையில் படை குவிப்பு: ரஷ்யாவுக்கு ஐ. ஒன்றியம் எச்சரிக்கை

உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வரும் கவலைக்கு மத்தியில் உக்ரைனுக்கு எதிரான பகை நடவடிக்கைக்கு கடும் பதில் கொடுக்க வேண்டி ஏற்படும் என்று ஐரோப்பிய தலைவர்கள் ரஷ்யாவை எச்சரிக்கவுள்ளனர்.

பிரசல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய கெளன்சில் மாநாட்டில் இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்குலக நாடுகள் விடுக்கும் எச்சரிக்கைகளின் தொடர்ச்சியாகவே இது உள்ளது.

உக்ரைனுக்கு எதிராக எந்த தாக்குதல் திட்டமும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

இதேநேரம் அமெரிக்காவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்று ரஷ்யா தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

உக்ரைன் எல்லைக்கு அருகே 100,000 ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டிருப்பதாக மேற்குலக உளவுச் சேவைகள் தெரிவித்துள்ளன. ஜனவரி முடிவில் உக்ரைன் மீது ரஷ்யா இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக உக்ரைன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இது பற்றி முடிவு எடுத்துள்ளாரா என்பது பற்றி இன்னும் உறுதியாகவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பதற்றத்தை தணிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறைவேற்றுக் குழுவான ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் உர்சுல் வொன் டெர் லெயேன் கடந்த திங்கட்கிழமை ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளார். “நீங்கள் நினைக்கும் வெவ்வேறு துறைகளை இலக்கு வைத்து மேலதிக தடைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன” என்றும் அவர் ரஷ்யாவை எச்சரித்திருந்தார்.

எனினும் கிழக்கு பக்கமாக நோட்டோவின் விரிவாக்கம் மற்றும் ரஷ்ய எல்லைகளுக்கு நெருக்கமாக ஆயுதங்களை நிறுத்துவதற்கு எதிராக சட்டரீதியான பாதுகாப்பை ரஷ்யா கோரியுள்ளது. தமது செயற்பாடுகள் தற்காப்பு நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டிருக்கும் நேட்டோ அமைப்பு, நேட்டோவில் இணையும் உக்ரைனின் எதிர்பார்ப்பை எந்த நாட்டாலும் தடுக்க முடியாது என்றது.

உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்ய எல்லைகளை பகிர்ந்துகொண்டபோதும் ரஷ்யாவுடன் ஆழமான சமூக மற்றும் கலாசார உறவை கொண்டுள்ளது. உக்ரைன் ஆத்திரத்தை தூண்டுவதாக ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது.

Fri, 12/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை