நாட்டை முடக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது

மக்களை பொறுப்பாக நடக்குமாறு கோரிக்கை

நாட்டை முடக்கும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்குக் கிடையாது. எதிர்வரும் பண்டிகை காலத்தில் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பொறுப்புடன் நடக்க வேண்டுமென இணை அமைச்சரவை பேச்சாளர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அனைவரும் பாதுகாப்பாக செயற்படாவிட்டால் ஆபத்தான  நிலை ஏற்படலாமெனவும் அனைவரதும் சுகாதார பாதுகாப்பு மாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரமும் பொதுமக்களின் செயற்பாடுகளிலே தங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்று அதிகரிப்புடன் நாடு மூடப்படுமா? என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது. நாட்டை மூடும் எந்த நோக்கமும் அரசாங்கத்திற்குக் கிடையாது. கஷ்டங்களுக்கு மத்தியில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. நாடு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதற்காக நாம் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்திவிட்டதாக அர்த்தமாகாது. நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளும் பாதுகாக்கப்படும் வரை நாட்டில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதை உணர வேண்டும். பெருமளவான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இளம்வயதினருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொறுப்புடன் தமது பாதுகாப்பை தாங்களே முன்னெடுத்து தமது பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி சமூக இடைவெளியை பேணி நடக்குமாறு அனைவரையும் கோருகிறோம். மூன்றாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் தொற்று உலகளவில் பரவ ஆரம்பித்துள்ளது. பல நாடுகள் தமது எல்லைகளை மூடியுள்ளன.பயங்கரமான ஆபத்து நிலை உருவாகி மீண்டும் தொற்று அதிகரிக்கும் ஆபத்து நிலை உருவாகியுள்ளது.

  ஷம்ஸ் பாஹிம்

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை