ஈரான் அணு பேச்சு: மாற்று திட்டம் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை

ஈரானின் அணு கட்டுப்பாட்டுக்கான ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முயற்சி தோல்வி அடைந்தால் அமெரிக்கா மாற்றுத் திட்டங்களுக்கு தயாராகும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இராஜதந்திர முயற்சிகளை இந்த நாள், இந்த மணி வரை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில் அதுவே சிறந்த தேர்வாக உள்ளது. ஆனால் இதற்கு மாற்றுகள் தொடர்பிலும் எமது கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்” என்று இந்தோனேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பிளிங்கன் நேற்று தெரிவித்தார்.

ஈரான் மற்றும் உலக வல்லரசு நாடுகளுக்கு இடையே 2015 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அணு உடன்படிக்கையை புதுப்பிக்கும் முயற்சியாக கடந்த வியாழக்கிழமை பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது. ஈரானுடனான இந்த அணு உடன்படிக்கையில் இருந்து டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா விலகிக்கொண்டது.

அமைதியான தேவைக்காக மாத்திரமே அணு சக்தியை மேம்படுத்துவதாக ஈரான் கூறியபோதும் ஈரான் அந்தத் தேவைக்கு அப்பால் யுரேனியத்தை செறிவூட்டுவதாக மேற்குலக சக்திகள் கூறுகின்றன. இவ்வாறு யூரேனியத்தை செறிவூட்டுவது அணு ஆயுதத்தை பெறும் திறனை அதிகரிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஈரானுடனான உடன்படிக்கைக்கு திரும்பத் தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறுவதோடு, தாம் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஈரான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனினும் தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தையில் ஈரான் உண்மையான ஈடுபாடு காட்டாத நிலையில் காலம் கடந்து செல்வதாக இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த கூற்றை மேற்கோள்காட்டியே பிளிங்கன் மேற்படி கருத்தை வெளியிட்டிருந்தார்.

“துரித முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ஈரான் அணு உடன்படிக்கை வெற்று உறையாக மாறிவிடும்” என்று பிளிங்கள் கூறினார். “ஈரான் முன்வந்து இந்த உடன்படிக்கைக்கு இணங்க இன்னும் காலம் இருக்கிறது” என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறிப்பிட்டார்.

Wed, 12/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை