வாழைச்சேனை மீனவர்கள் குறித்து டக்ளஸ் கலந்துரையாடல்

இந்தியக் கடற்படையினரால் மீட்கப்பட்ட வாழைச்சேனை மீனவர்களையும் அவர்களது படகையும் நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக் கடற்றொழிலாளர்களின்  உறவினர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் நேற்று மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து அது தொடர்பாக கலந்துரையாடினர்.

கடந்த 26 ஆம் திகதி செப்டெம்பர் மாதம் வாழைச்சேனையிலிருந்து கடலுக்குச் சென்ற நான்கு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்தனர்.

இவர்கள் அந்தமான் தீவுப் பகுதியில் இந்தியப் கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது சென்னையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகளையடுத்து இந்திய சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் எதிர்வரும் 14 ஆம் திகதி இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

நான்கு மீனவர்களையும் அவர்களது படகையும் நாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாகவே நேற்றைய சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேவேளை, புத்தளம் கற்பிட்டிப் பிரதேசத்தில் சுருக்குவலை தொழிலில் ஈடுபடுபவர்களுக்கான அனுமதியை வழங்குமாறு பிரதேச மீனவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவின்படி கற்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 53 பேருக்கு சுருக்கு வலை அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும், அதைவிட சுமார் 120 பேர் சுருக்கு வலைக்கான அனுமதிகளை வழங்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

மீன்பிடித் தொழில் முறைகள் தொடர்பாக புதிய ஒழுங்கு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதுவரையில் தொழிலில் ஈடுபடுவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்த பின்னர் முடிவை தெரிவிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Thu, 12/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை