தவறான தீர்மானங்களுக்கு துணைபோக முடியாது

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கம் கிடையாது, ஆனால் அதற்காக தவறான தீர்மானங்களுக்கு துணைபோகவும் முடியாது என தெரிவித்துள்ள நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையிலான ஒப்பந்தம் தொடர்பில் உயர்நீதிமன்றம் சிறந்த தீர்வை வழங்குமென முழுமையாக எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எமது தலைமையிலான அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக செயற்படுகின்றமை கவலைக்குரியது. கொள்கைக்கு எதிரான தீர்மானங்கள், அரசாங்கம் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியையும், அரசாங்கத்தின் கொள்கையையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குண்டு.

யுகதனவி மின்நிலையம் இயற்கை எரிவாயு விநியோகத்தின் ஊடாக செயற்பட வேண்டும் என்பது அவசியமானதாகும்.

இயற்கை எரிவாயு விநியோக நிறுவனத்திற்கும்,மின்சாரத்துறை அமைச்சுக்குமிடையில் சாதாரன ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். அதனை விடுத்து எரிவாயு விநியோகத்தின் உரிமையை பிற நாட்டின் தனியார் நிறுவனத்திற்கு ஏகபோகமாக விட்டுக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அமெரிக்க நிறுவனம் இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஏகபோக உரிமையை தனதாக்குவதன் ஊடாக எதிர்காலத்தில் தோற்றம் பெறும் சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அதன் காரணமாகவே அமைச்சரவையின் மூன்று பிரதான உறுப்பினர்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறோம்.

யுகதனவி விவகாரத்திற்கு சமூகத்தின் மத்தியில் பல எதிர்ப்புக்கள் தோற்றம் பெற்றுள்ளன.

கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தத்திற்கு எதிராக பல தரப்பினர் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.

நீதிமன்றம் சிறந்த தீர்வை பெற்றுக் கொடுக்கமென எதிர்பார்க்கிறோம் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Sat, 12/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை