நிதி நெருக்கடி மிகு காலத்திலும் கல்வித்துறைக்கு அதிக நிதி

அரசு பொறுப்புடன் செயற்படுவதாக தினேஷ் தெரிவிப்பு

 

நாட்டில் நிதி நெருக்கடி நிலவுவதை காரணங்காட்டி அரசாங்கம் அனைத்து துறைகளையும் மூடி விடவில்லை என சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சிறந்த வழிகாட்டல் மூலம் அனைத்து துறைகளையும் சாத்தியமானதாக முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

காலங்காலமாக தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு எமது அரசாங்கம் தீர்வு காண நேர்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், கல்வித்துறை முன்னேற்றத்திற்காக பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று கல்வியமைச்சு, கல்வி மறுசீரமைப்பு திறந்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சு, தொழிற் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்கள் இராஜாங்க அமைச்சு, அறநெறிப் பாடசாலைகள் கல்வி இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

கல்வி அமைச்சானது பாடசாலை கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி வரை சிறந்த கல்வியை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின் சிறந்த பிரஜைகளாக மாணவர்களை உருவாக்குவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நாட்டில் இலவச கல்விக்கான சட்டம் கொண்டுவரப்பட்டு நூறு வருடங்கள் நிறைவடைகிறது. இத்தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து எமது எதிர்கால சந்ததியான பிள்ளைகளுக்கு சிறந்த அறிவைப் பெற்றுக் கொடுத்து அவர்களை சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

பத்திரிகைகளில் வெளியிடுவது போல் சட்டங்கள் உருவாக்கப்படுவதில்லை. கல்வியமைச்சை பொருத்தவரை தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்ற அனுமதியுடனேயே சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

சுபிட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கிணங்க கல்வித்துறை சம்பந்தமான நிறுவனங்களுக்கு பயிற்சிகளை வழங்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாடசாலை மாணவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் பாதுகாப்பதற்காகவே நாம் பாடசாலைகளை மூடினோம். நாம் கடந்த 21 ஆம் திகதியே பாடசாலைகள் உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டன. எதிர்காலத்திலும் சர்வதேச நாடுகளின் நிலைமையை கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தேசிய பாடசாலைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் கிராமிய பாடசாலைகளை முன்னேற்றுவதற்கும் ஆசிரியர்,அதிபர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கும் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையை முன்னேற்றுவதற்கான பாரிய நிதி மாகாணசபைகளில் உள்ளது. அதன்மூலம் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 12/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை