ஜப்பான் கட்டட தீ தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணை

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயில் குறைந்து 27 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தத் தீ தீட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக என்.எச்.கே அரச வானொலி குறிப்பிட்டுள்ளது.

8 மாடிகள் கொண்ட அந்தக் கட்டடத்தில் பல தீயணைப்பு வீரர்கள் உள்ளும் புறமும் ஓடுவதைத் தொலைக்காட்சிப் படங்கள் காட்டின. கட்டடத்தின் நான்காம் மாடி தீயால் கடுமையாகச் சேதமுற்றது.

அதில் மனநலச் சேவைகளும் பொது சுகாதாரச் சேவைகளும் வழங்கும் நிலையம் அமைந்திருந்ததாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.

தீயால் காயமுற்றோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இருப்பினும் காயமுற்ற 27 பேரில் எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று ஒசாக்கா தீயணைப்பு நிலைய அதிகாரிகள் கூறினர்.

கட்டிடத்தில் இருந்த சிலர் ஏணிகளைக் கொண்டு தீயணைப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டனர்.

20 சதுர மீற்றர் பகுதி தீயால் சேதம் அடைந்த நிலையில் அந்தத் தீ அரை மணி நேரத்திற்குள் அணைக்கப்பட்டதாக உள்ளூர் தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த தீயினால் கட்டடத்தின் ஏனைய மாடிகளுக்கு அல்லது அண்டைய பகுதிகளின் சொத்துகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதில் மருந்தகத்தில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் வேண்டுமென்றே தீயை மூட்டியதாகச் சந்தேதிக்கப்படுகிறது. வயதான ஆடவர் ஒருவர் வைத்திருந்த பையிலிருந்து தீப்பிடிக்கக்கூடிய திரவம் கசிந்ததாகவும் அதனால் தீ மூண்டதாகவும் தகவல்கள் கூறின. 

2019இல் கியோட்டோவில் திரைப்பட அரங்கு ஒன்றில் ஒருவர் தீவைத்துக் கொண்டதை அடுத்து 36 பேர் கொல்லப்பட்டனர். இது உலகப் போருக்குப் பின்னர் அந்நாட்டில் அதிக உயிரிழப்பு இடம்பெற்ற சம்பவமாக இருந்தது.

 

Sat, 12/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை