மெக்சிகோவில் குடியேறிகளை ஏற்றிய டிரக் வண்டி கவிழ்ந்ததில் 53 பேர் பலி

தெற்கு மெக்சிகோவில் டிரக் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

சியாபாஸ் மாநிலத்தில் அந்த டிரக் வண்டி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தபோது அதற்குள் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த குடியேறிகள் என்று கூறப்படும் 100க்கும் அதிகமானவர்கள் இருந்துள்ளனர்.

கவிழ்ந்த டிரக் வண்டிக்கு அருகில் வீதி எங்கும் பாதிக்கப்பட்டவர்கள் சிதறி இருப்பது அங்கு பிடிக்கப்பட்ட படங்களில் பார்க்க முடிகிறது. வெள்ளை நிற உறைகளில் சடலங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

இவ்வாறானவிபத்துகளில் மெக்சிகோவில் இடம்பெற்ற மோசமான விபத்துகளில் ஒன்றாக இது உள்ளது. இதில் குறைந்தது 58 பேர் காயமடைந்திருப்பதோடு சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று சியாபாஸ் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின தலைவர் மனுவேல் கார்சியா தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை. பெரும்பாலானவர்கள் ஹொன்டுராஸ் மற்றும் குவாதமாலாவில் இருந்து இந்த டிரக்கில் ஏற்றப்பட்டுள்ளனர்.

வேகமாக வந்த டிரக் வண்டி வளைவு ஒன்றில் வைத்து திருப்ப முயன்றபோது பாதசாரிகளுக்கான தடுப்பில் மோதி இருப்பதாக கூறப்படுகிறது. சியாபாஸ் தலைநகர் டுக்ஸ்லா குட்டியரஸை நோக்கி இந்த டிரக் பயணித்துள்ளது.

உள்ளிருப்பவர்களின் எடை தாங்காமல் டிரக் வண்டி கவிழ்ந்ததாக விபத்தில் சிக்கிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

“அது வளைவு ஒன்றை எடுத்தபோது எமது எடை காரணமாக அதனோடு சேர்ந்து நாமும் சாய்ந்தோம்” என்று சம்பவ இடத்தில் அதிர்ச்சியுடன் இருந்த குவாதமாலா நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் சமூக ஊடகத்தில் இடம்பெற்ற நேரடி ஒளிபரப்பு ஒன்றில் குறிப்பிட்டார். “டிரக்கிற்கு உள்ளே இருக்கும் ஆட்களின் எடையை சமாளிக்க முடியாமல் போனது” என்றும் அவர் கூறினார்.

குவாதமாலாவின் அண்டை மாநிலமான சியாபாஸ், ஆவணங்களற்ற குடியேறிகளின் பிரதான இடமாற்று புள்ளியாக உள்ளது.

வறுமை மற்றும் வன்முறைகள் காரணமாக ஆண்டுதோறும் மத்திய அமெரிக்காவில் இருந்து ஆயிரக்கணக்கான குடியேறிகள் மெக்சிகோ வழியாக அமெரிக்காவை அடைய முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் பலரும் ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் செலுத்தும் நிலையில், அவர்கள் ஆபத்தான நீண்ட டிரக் பயணத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லை உலகில் அதிக உயிரிழப்பு நேரும் ஒற்றை எல்லைக் கடவை என குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு தரவுகள் காட்டுகின்றன. இந்த எல்லையை கடக்கும் முயற்சியில் இந்த ஆண்டில் மாத்திரம் குறைந்தது 650 பேர் உயிரிழந்துள்ளனர். இது வேறு எந்த ஆண்டுகளையும் விட அதிகமான எண்ணிக்கையாக உள்ளது.

இதில் எல்லையை நோக்கிய ஆபத்தான பயணங்களிலும் பல உயிரிழப்புகள் இடம்பெறுகின்றன. எனினும் இது பற்றி துல்லியமான தரவுகளை சேகரிப்பது கடினமாக உள்ளது என்று குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்து வருத்தம் அளிப்பதாக மெக்சிகோ ஜனாதிபதி அன்ட்ரெஸ் மனுவேல் லோபஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘இந்த சோகத்திற்கு ஆழ்ந்து வருந்துகிறேன்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sat, 12/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை