புகையிரத டிக்கெட் வழங்காமை போராட்டத்தால் தினமும் ரூ. 5 மில். நஷ்டம்

புகையிரத டிக்கெட் வழங்காமை போராட்டத்தால் தினமும் ரூ. 5 மில். நஷ்டம்-Railway Station Masters Strike-Ticket Not Issued

- நாடளாவிய போராட்டம் நாளை பேச்சுவார்த்தை வரை ஒத்திவைப்பு

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று நள்ளிரவு முதல் நாடளாவியரீயில் விஸ்தரிக்க இருந்த தொடர் வேலை நிறுத்தம் நாளை காலை 10.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பொதுமுகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தொடர்ச்சியாக வேலை நிறுத்தம் மேற்கொள்ளப் போவதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்காக புகையிரத ஊழியர்களுக்கு சுகாதார வசதிகளை வழங்காமை உள்ளிட்ட பல்வெறு கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கொவிட் நோய் தொற்றுக்கு இலகுவில் இலக்காகி பாதிக்கப்படுவதாகவும், முறையான தனிமைப்படுத்தல் திட்டம் இல்லாமை, சுகாதார பாதுகாப்பு தொடர்பான கிருமிநீக்கித் திரவங்களை விரைவாக வழங்காமை, இடமாற்றங்கள், தொழில்முறை பிரச்சினைகள் ஆகியவற்றை மேற்கொள்காட்டி புகையிரத நிலைய அதிபர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் இந்த போராட்டத்‍தை முன்னெடுத்துள்ளனர். டிக்கெட் விநியோகித்தல், பார்சல் பொறுப்பேற்றல் என்பவற்றை பொறுப்பதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர்.

இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக ரயிலில் பயணிக்க டிக்கட் விநியோகிக்கப்படவில்லை என்பதோடு, பொதுமக்கள் இலவசமாகவே பயணம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ரயில்வே பொதுமுகாமையாளருடன் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தோல்வியடைந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தொழிற்சங்கங்கள் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தின.

இதன் போது, இன்று (26) நள்ளிரவு முதல் மேற்கொள்ள இருந்த நாடளாவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (27) காலை வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். நாளை பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் இடையில் நாளை காலை 10.00 மணிக்கு முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் டிக்கெட் விநியோகிப்பதை பகிஷ்கரித்துள்ளதால் தினமும் 5 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. (பா)

(ஷம்ஸ் பாஹிம்)

Sun, 12/26/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை