பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 3 பேர் பலி; 15 வயது சிறுவன் சரணடைவு

அமெரிக்காவின் மிச்சிகன் பிராந்தியத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, ஆசிரியர் ஒருவர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 16 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் 17 வயது சிறுமியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இப்பகுதி அளவிலான தன்னியக்க கைத்துப்பாக்கி மூலம் 15 முதல் 20 தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர் இச்செயலை தனியாகச் செயல்பட்டு மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை 12.51 மணியளவில் (GMT 17:51) Oxford High School பாடசாலையில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமை தொடர்பில் 911 இலக்கத்திற்கு சுமார் 100 அழைப்புகள் வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரான இரண்டாம் வருட மாணவன், பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஐந்து நிமிடங்களில் சரணடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்த 8 பேரில், இருவர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, ஏனைய ஆறு பேருக்கும் பாரிய அளவிலான பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும், சந்தேகநபரான மாணவர் எதனையும் பேசாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் சமீப ஆண்டுகளில் பாடசாலை ரீதியான துப்பாக்கிச்சூடு தொடர்ந்து அதிகரித்து சென்றுகொண்டிருப்பதாக, துப்பாக்கிக்கா எதிரான அமைப்பான Everytown தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது இந்நிலை குறைவடைந்த போதிலும், 2021 இல் இதுவரை பாடசாலை ரீதியான 138 துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தொடர்ந்து இவ்வாறான தாக்குதல்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Wed, 12/01/2021 - 08:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை