சமையல் எரிவாயு சம்பவங்கள்; 24 மணிநேரத்தில் முக்கிய தீர்மானம்

12 இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு தொடர்பில் ஆராய்ந்து முடிவு

 

சமையல் வாயு சிலிண்டர் சார்ந்த அனர்த்த சம்பவங்கள் தொடர்பில் எதிர்வரும் 24 மணி நேரத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய கூட்டத்தின் போது, சமையல் வாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,  சமையல் வாயு சிலிண்டர்களன்றி சிலிண்டர்கள் சார்ந்த வெடிப்புச் சம்பவங்களே நடந்துள்ளன. சமையல் வாயு சிலிண்டர் வெடித்ததாக அறிவிக்கப்படவில்லை.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது வழமைக்கு மாறாக இருப்பதை ஏற்றுக் கொள்கிறோம். இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இது தொடர்பில் சபையில் தெளிவு படுத்தினார். 2015 முதல் 233 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வருடத்திற்கு 35-40 வரை நடக்கலாம்.மாதத்திற்கு 3-4 நடக்க வேண்டும்.ஆனால் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகாத மாதங்களும் இருப்பதாக லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இந்த சம்பவங்களுடன் தொடர்புபட்ட பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுள்ளன. பொலன்னறுவை சம்பவத்தில் பெண் தனக்குத் தானே தீவைத்துக் கொண்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

அதனுடன் தொடர்புள்ள வீடியோ அழைப்பையும் ஊடகங்களுக்கு காண்பித்தார். இது இயற்கைக்கு மாறானது என்பதோடு எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பாக எரிவாயு தொடர்பில் மேற்பார்வைசெய்ய அரச நிறுவனமொன்று கிடையாது. அழுத்தத்தை அளவிடுவதற்கு பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அதிகாரமுள்ளனது.ஆனால் எரிவாயு கலவை தொடர்பில் ஆராய பொறுப்பான நிறுவனம் கிடையாது. இவற்றின் மாதிரிகளை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி பரீட்சிக்கப்படுகிறது.

12 இடங்களில் நடந்த அனர்த்தங்கள் தொடர்பிலான மாதிரிகள் பெறப்பட்டு ஆராயப்படுகிறது.

ஜனாதிபதி இந்த பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதோடு சகல தரப்பினரையும் இணைத்து எதிர்வரும் ஓரிரு தினங்களில் முக்கிய தீர்மானம் எடுக்கப்படுமென எதிர்பார்க்கிறோம். மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில பொறுப்பற்ற கருத்துக்களால் அந்த நிலை ஏற்பட்டுள்ளது.அரசாங்கத்தின் பொறுப்பை நாம் ஒதுக்கவில்லை. மேற்பார்வை செய்ய நிறுவனமொன்று கிடையாது என்பதை ஏற்கிறோம்.

மேற்பார்வை நிறுவனம் அமைக்க தேவையான தகவல் திரட்ட பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். 1978 முதல் இன்று வரை மேற்பார்வை நிறுவனம் இல்லாததது குறித்து வெட்கப்பட வேண்டும். தாமதித்தாவது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது முக்கியமானது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை