பிலிப்பைன்ஸின் ராய் சூறாவளி: உயிரிழப்பு 208 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸை சூறையாடிய வலுவான சூறாவளியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது.

பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு தீவுகளை கடந்த வியாழக்கிழமை தாக்கிய ராய் சூறாவளி மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசிய நிலையில் சுமார் 300,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

இதில் குறைந்தது 239 பேர் காயமடைந்திருப்பதோடு 52 பேர் தொடர்ந்து காணாமல்போன நிலையில் உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகள் பேரழிவை சந்தித்திருப்பதாக மீட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாதிப்பின் அளவை கணிப்பது கடினமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

சூறாவளியை அடுத்து நிலச்சரிவுகள் மற்றும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்கும் சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்களுக்கு உதவுவதற்கு ஆயிரக்கணக்கான இராணுவ, கடலோரக் காவல் படை மற்றும் தீயணைப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

பல பகுதிகள் மின்சாரம், தொடர்பாடல் இன்றி காணப்படுவதோடு மிகக் குறைவான குடிநீர் வசதியே இருப்பதாக பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவை சங்க தலைவர் ரிச்சர்ட் கார்டன் தெரிவித்துள்ளார்.

“சில பகுதிகள் இரண்டாம் உலகப் போரில் குண்டு வீசி சேதப்படுத்தப்பட்டதை விடவும் மோசமாக காணப்படுகிறது” என்று அவர் கூறினார். நீண்ட கால நிவாரண உதவிகளுக்காக 22 மில்லியன் டொலர் உதவிகளை சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள் கோரியுள்ளன.

பிலிப்பைன்ஸில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சூறாவளிகள் தாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹையான் சூறாவளியில் பிலிப்பைன்ஸில் 6,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை