2022 இலும் குடிநீர் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது

பாராளுமன்றத்தில் அமைச்சர் வாசுதேவ உறுதி

2022 ஆம் ஆண்டிலும் குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க மாட்டோமென நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 2019 இல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நஷ்டம் 1,126 மில்லியன்களாக இருந்த போதும் 2020 இல் வரிக்குப் பின்னரான இலாபம் 520 மில்லியன்களென்றும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நீர்வழங்கல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

நீர் வழங்கலும் மலசல கழிவகற்றலும் வருமானம் கிடைக்கும் துறைகளல்ல. அவை மக்கள் நலச் சேவைகளாகும். அதற்கான செலவை பெறவே அந்த சேவை வழங்கலுக்கு மாத்திரம் அறிவிடுகிறோம். 15 அலகு வரை பயன்படுத்தினால் குறைந்த கட்டணமே அறிவிடப்படுகிறது ஆனால் ஒரு அலகிற்கு 50 ரூபா வரை செலவாகிறது. சமூகத்தை இணைத்துக்கொண்டு நீர்வழங்கல் திட்டங்களை செயற்படுத்தி வருகிறோம்.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். 2019 இல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நஷ்டம் 1,126 மில்லியன்களாக இருந்தது.2020 இல் வரிக்குப் பின்னரான இலாபம் 520 மில்லியன்களாகும். எமது ஊழியர்களினதும் பொறியியலாளர்களினதும் அர்ப்பணிப்பினால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. கடந்த காலத்தில் வெளிநாட்டு பொறியியலாளர்கள் திட்டங்கள் தயாரிக்க நீண்ட காலம் எடுப்பார்கள்.ஆனால் எமது உள்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் அனைத்து திட்டமிடல்களும் ஒரு வருட காலத்தினுள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்

Fri, 12/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை