கொவிட்-19: அமெரிக்கா, பிரான்ஸில் தினசரி தொற்றுச் சம்பவங்கள் உச்சம்

ஒமிக்ரோன் கொரோனா திரிபு தொடர்ந்து வேகமாகப் பரவி வரும் நிலையில் வைரஸ் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் இதுவரை இல்லாத அளவில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் தினசரி நோய்த் தொற்று சம்பவங்கள் உச்சம் பெற்றுள்ளன.

அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமை 440,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவானதாக அந்நாட்டின் நோய் மற்றும் தடுப்பு மையம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மத்தியில் சோதனை முடிவுகளில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக இது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையாக இருக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் ஐரோப்பாவில் இதுவரையில் பதிவான உச்ச தினசரி தொற்றுச் சம்பவங்கள் பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு கடந்த செவ்வாய்க்கிழமை 179,807 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இது ஜனவரி ஆரம்பத்தில் பிரான்ஸின் தினசரி சம்பவங்கள் 250,000 ஆக அதிகரிக்கக் கூடும் என்பதை இது காட்டுகிறது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஒலிவியர் வேரன் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இத்தாலி, கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் இங்கிலாந்திலும் தொற்று சம்பவங்கள் சாதனை அளவுக்கு அதிகரித்துள்ளன.

பிரிட்டனில் 24 மணி நேர இடைவெளியில், முன்னெப்போதும் இல்லாத அளவு, புதிதாகச் சுமார் 130,000 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் புத்தாண்டு வரை, புதிய கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதில்லை என்று பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியிருந்தார்.

போர்த்துக்கலிலும் அதே நிலை நீடிக்கிறது. புதிதாக 17,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜனவரிக்குப் பின்னர் இதுவே மிக அதிக எண்ணிக்கையாகும். கிரேக்கத்திலும் வைரஸ் பரவல் நிலவரம் மேம்படும் வாய்ப்புத் தெரியவில்லை.

இதுவரையில்லாத அளவு அங்கு புதிதாக 21,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் திரிபின் அச்சுறுத்தல் தொடந்தும் மிக உச்ச நிலையிலேயே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கொவிட் தொடர்பான தனது வாராந்த அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த வாராந்த அறிவித்தலில், டிசம்பர் 26க்கு முந்திய வாரத்தில் ஐரோப்பாவில் புதிய கொரோனா தொற்று சம்பவங்கள் 57 வீதம் அதிகரித்திருப்பதோடு அமெரிக்கப் பிராந்தியத்தில் அது 30 வீதம் உயர்ந்துள்ளது.

டெல்டாவை விட ஒமிக்ரோன் வேகமாகப் பரவக்கூடியது. இரண்டு அல்லது மூன்று நாளுக்குள் அது இரட்டிப்பாகும் வாய்ப்பு இருப்பதைச் சான்றுகள் நிரூபிப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.

என்றாலும், டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரோனால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் குறைவு என்பதை முன்னோடித் தகவல்கள் காட்டுகின்றன.

Thu, 12/30/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை