கொவிட் ஒழிப்புக்கு இதுவரை 113 மில். ரூபா நிதி செலவீடு

பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முக்கியத்துவமளிப்பு

அவசியமான காலங்களில் அவசியமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அரசு ஒருபோதும் பின்னிற்கவில்லை எனவும் தெரிவிப்பு

பாராளுமன்றத்தில் சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்லதெரிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இதுவரை 113 பில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசியமான காலங்களில் அவசியமான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்கவில்லையென தெரிவித்த அமைச்சர், உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை முன்னணியில் திகழ்வதற்கான காரணமும் அதுவே என்றும் தெரிவித்தார்.

அத்துடன் சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து அந்த துறையை மேலும் முன்னேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

பொதுவாகவே வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சியினர் அதற்கு எதிராகவும் ஆளும் கட்சியினர் அதற்கு ஆதரவாக வும் கருத்துக்களை முன்வைப்பது இயல்பானது. எனினும் இம்முறை சுகாதார அமைச்சு மீதான விவாதத்தில் எதிர்க்கட்சியினர் சிறந்த விடயங்களை சிறந்தவைகளாகவும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளமை முன்னுதாரணமானது.

கொரோனா வைரஸ் பரவல்ஆரம்பமான முதல் கட்டத்திலேயே அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தடுப்பூசி இடையில் கிடைக்காத அக்காலங்களில் சிறு பின்னடைவு ஏற்பட்டது என்றாலும் பின்னர் அது நிவர்த்தி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அனைத்து சுகாதாரத்துறையினர் முப்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினருக்கும் நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் தமது முழுமையான அர்ப்பணிப்புள்ள சேவையை வழங்கியதன் மூலமாகவே நாம் இந்தளவு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க முடிந்துள்ளது.

சுகாதாரத் துறையின் சிறப்பான செயற்பாடுகள் காரணமாகவே நாட்டில் மகப்பேறு தொடர்பான மரணங்கள் மற்றும் சிசு மரணங்கள் வெகுவாக குறைவடைந்துள்ளன. மனிதர்களின் ஆயுட்காலமும் அதிகரித்துள்ளன. பெருமளவிலான மருந்துகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து பெருமளவு நிதியை மீதப்படுத்திக் கொள்வதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார் .

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Wed, 12/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை