மீண்டும் இடம்பெறும் Red Bull Outriggd படகோட்டப் போட்டிகள்

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, ரெட்புல் (Red Bull) மீண்டும் படகோட்டப் போட்டியை அண்மையில் ஆரம்பித்திருந்தது. இப்போட்டியானது 2021, நவம்பர் 06 ஆம் திகதி கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்தில் நடைபெற்றதுடன், குறித்த கடற்கரையில் இடம்பெற்ற முதலாவது நீர் விளையாட்டுப் போட்டியாகும்.

முதன் முறையாக கொழும்பு துறைமுக நகரத்தில் இடம்பெறும் 2021 Red Bull Outriggd போட்டித் தொடரில் படகோட்டம் தொடர்பான வீர வீராங்கனைகள், அதனுடன் தொடர்புபட்ட சங்கங்களின் உறுப்பினர்கள், தொழில்சார் மீன்பிடிப்பாளர்கள், இவ்விளையாட்டு தொடர்பில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் இவ்வாறான குதூகலம் மிக்க அனுபவத்தை தேடிச் செல்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு பின்னணியைக் கொண்ட 70 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளைக் காண ஏராளமான பொதுமக்களும் கொழும்பு துறைமுக நகரத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியாளர்களின் திறமைகளை சோதிக்கும் வகையிலான தடைகள் பலவற்றை உள்ளடக்கிய இந்நிகழ்வுகள் போட்டியாளர்களுக்கு மாத்திரமன்றி பார்வையாளர்களுக்கும் தனித்துவமான அனுபவமாக அமைந்தது.

Red Bull Outriggd போட்டியின் வெற்றியாளர்கள் பெண்கள், ஆண்கள், கலப்பு பிரிவு போட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். மகளிர் இறுதிப் போட்டியில் 'களனிய' அணியின் எல். தருஷி தெவ்மினி குரே மற்றும் எஸ். கே. நிமேஷிகா பெரேரா (குழு 3) வெற்றி பெற்றிருந்தனர். ஆடவருக்கான இறுதிப் போட்டியில் 'பலலு வெவ' அணியின் மொஹமட் ஜலீல் மொஹமட் ரசான் மற்றும் எம். அஜீஸ் கான் (குழு 25) ஆகியோர் வெற்றி பெற்றனர். கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் 'களனிய 9' அணியின் டப்ளியூ.பீ.எஸ். பிரியதர்ஷன மற்றும் பி.எல். தருஷி தெவ்மினி குரே ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.

Red Bull Outriggd படகோட்டப் போட்டிகள் முதன்முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு தியவன்னா ஓயவில் இடம்பெற்றிருந்தது. கொவிட்-19 தொற்று காரணமாக, கடந்த 2020 இல் இப்போட்டிகள் நடாத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Mon, 11/22/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை