பாகிஸ்தானுக்கு அதிர்ச்சிகொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸி.!

இறுதி போட்டியில் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா மோதல்

அவுஸ்திரேலியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் நடைபெற்ற ஐசிசி ரி 20 உலகக்கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாகிஸ்தானுக்கு வழங்க, மொஹமட் ரிஷ்வான், பக்ஹர் ஷமான் மற்றும் பாபர் அஷாம் ஆகியோரின் மிகச்சிறந் துடுப்பாட்ட உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கடந்த போட்டிகளை போன்று, இந்த போட்டியிலும் ஆரம்ப விக்கெட்டுக்காக பாபர் அஷாம் மற்றும் மொஹமட் ரிஷ்வான் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்து, 71 ஓட்டங்களை பெற்றனர். எனினும், பாபர் அஷாம் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பாபர் அஷாமின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய பக்ஹர் ஷமான் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி, 32 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், மொஹமட் ரிஷ்வான் மிகச்சிறப்பாக ஆடி, 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில், மிச்சல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், 177 என்ற சவாலான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின், ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கிளேன் மெக்ஸ்வேல் ஆகிய அனுபவ வீரர்கள் ஓட்டங்களை குவிக்க தவறிய போதும், டேவிட் வோர்னர், மெதிவ் வேட் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுஸ்திரேலிய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச்சென்றனர்.

ஒரு கட்டத்தில் சதாப் கானின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் 77 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அவுஸ்திரேலிய அணி தடுமாறிய போதும், டேவிட் வோர்னர் தன்னுடைய அனுபவ துடுப்பாட்டத்தால், 30 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இவரின் இந்த பங்களிப்பு அணிக்கு சாதகமாக அமைந்த போதும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டமை அவுஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை கொடுத்தது. எனினும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் மெதிவ் வேட் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, அவுஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இறுதி இரண்டு ஓவர்களுக்கு 21 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், சஹீன் ஷா அப்ரிடி வீசிய 19வது ஓவரின் கடைசி மூன்று பந்தில் 3 சிக்ஸர்களை விளாசி, மெதிவ் வேட் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். மெதிவ் வேட் 17 பந்துகளில் 41 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 30 பந்துகளில் 40 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில், சதாப் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்றுள்ள அவுஸ்திரேலிய அணி, இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளை பொருத்தவரை, இரண்டு அணிகளும் இதுவரை ரி 20 உலகக்கிண்ணத்தை வெற்றிக்கொள்ளவில்லை. எனவே, இந்த ஆண்டு புதிய அணி ரி 20 உலகக்கிண்ணத்தை வெல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Sat, 11/13/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை