மலையகத்தில் மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற காலநிலையை தொடர்ந்து மலையகத்தின் பல பகுதிகளிலும் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்படலாம் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒருசில பகுதிகளில் மக்கள் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் தொடர்ந்து அப்பகுதிகளில் வசித்துவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ரூவான்புர பகுதியில் நேற்று காலை 11மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.  

மேலும் இப்பகுதியில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.  

மண்மேட்டினை அகற்றி இயல்பு நிலை திரும்பும் வரை நாவலப்பிட்டியிலிருந்து ஹப்புகஸ்தலாவ மற்றும் கொத்மலை, பூண்டுலோயா, திஸ்பனை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  

மாத்தளை மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தோட்டை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அண்ணாசிவத்த தோட்டத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.லிந்துலை நாகசேனையிலிருந்து பெரிய இராணிவத்தை தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் இப்பாதையூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  

இதன் காரணமாக சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.  

மேலும் பாதையில் கற்பாறைகள் சரிந்து விழகூடிய ஆபத்தான நிலை காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.  

கம்பளை, உலப்பனை பிரதேசத்திலிருந்து, கொத்மலை, மாவில, மாவத்தூர ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான பாதையில் நேற்று பாரிய மண்மேடு சரிந்து விழுந்தது. அத்துடன், மரங்களும் முறிந்து விழுந்தன.  

இதனால் மேற்படி பாதை ஊடான போக்குவரத்து சிலமணிநேரம் முற்றாக ஸ்தம்பித்தது. அப்பகுதியில் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.  

கடும் மழை காரணமாகவே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.  

 இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படலாம் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் மண்சரிவு அனர்த்தங்கள் ஏற்படலாம் என இடர் முகாமைத்துவ நிலையம் தேசிய கட்ட ஆராய்ச்சி நிலையங்கள் இரத்தினபுரி கேகாலை காரியாலயங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, பெல்மதுளை, எஹலியகொடை, குருவிட்ட, இம்புல்பே, எலபாத்த கிரியெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் அரனாயக்க, தெரணியகல தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட இடங்களில் மேற்படி மண்சரிவு அபாயம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த ஆபத்தான பகுதிகளில் வசித்து வந்தவர்கள் ஏற்கனவே இப்பிரதேசங்களிலிருந்து பாதுகாப்பான மாற்றிடங்களுக்கு செல்லுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிகாரிகளின் எச்சரிக்கைககளையும் மீறி இன்னும் சிலர் இப்பகுதிகளில் தொடர்ந்து வசித்து வருவதாக பிரதேச 

செயலக மற்றும் கிராம சேவை அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

(ஹற்றன் சுழற்சி, கம்பளை, இரத்தினபுரி சுழற்சி, மாத்தளை சுழற்சி, தம்புள்ளை தினகரன் நிருபர்கள்) 

Thu, 11/11/2021 - 08:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை