புதிய கொரோனா திரிபு; உலக நாடுகள் எச்சரிக்கை நடவடிக்கை

தென்னாபிரிக்காவில் நோய்த் தொற்று அதிகரிப்பதற்கு காரணமானதாகக் கூறப்படும் அதிக எண்ணிக்கையான மரபணு பிறழ்வுகளுடன் புதிய கொவிட்-19 திரிபு ஒன்று கண்டுடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஆபிரிக்க பிராந்தியத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக உள்ள தென்னாபிரிக்காவில் இந்த மாதம் ஆரம்பம் தொடக்கம் தினசரி நோய்த் தொற்று சம்பவங்கள் பத்து மடங்காக அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் தென்னாபிரிக்காவுக்கு பயணத் தடை விதித்துள்ளன. தெற்கு ஆபிரிக்காவின் மேலும் ஐந்து நாடுகளில் இந்த புதிய வைரஸ் திரிபு பற்றிய கவலை அதிகரித்துள்ளது.

இந்த புதிய திரிபு டெல்டா திரிபை விடவும் அதிக தொற்று கொண்டதாகவும் தற்போதிருக்கு தடுப்பு மருந்துகளை எதிர்க்கும் தன்மை கொண்டது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

‘துரதிருஷ்டவசமாக நாம் புதிய திரிபு ஒன்றை அவதானித்துள்ளோம். அதுவே தென்னாபிரிக்காவில் கவலை அதிகரிக்கக் காரணமாகும்’ என்று வைரஸ் மருத்துவ நிபுணர் டுலியோ டி ஒலிவேரியா கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பி.1.1.529 என்று அழைக்கப்படும் இந்த திரிபு ‘மிக அதிக எண்ணிக்கையான மரபணு பிறழ்வுகளை கொண்டிருக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திரிபுக்கு உலக சுகாதார அமைப்பு கிரேக்க பெயர் ஒன்றை சூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘துரதிருஷ்டவசமாக இது தொற்று நோயின் மறுபிறப்பை ஏற்படுத்துகிறது’ என்று அந்த மருத்துவர் சுட்டிக்காட்டினார்.

தென்னாபிரிக்காவில் இருந்து பொட்ஸ்வானா மற்றும் ஹொங்கொங் சென்ற பயணிகளிடமும் இந்த வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் டி ஒலிவேரியா குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் திரிபு பற்றி தீவிரமாக அவதானித்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு இதனை ஒரு திரிபாக பார்ப்பது மற்றும் இது பற்றி கவலை கொள்வது பற்றி ஆராய்வதற்கு நேற்று முக்கிய கூட்டம் ஒன்றையும் அந்த அமைப்பு நடத்தியது. ‘ஆரம்பக்கட்ட ஆய்வில் இந்த வைரஸ் திரிபு பெரும் எண்ணிக்கையிலான பிறழ்வுகளை கொண்டிருப்பதை காட்டுவதோடு இது பற்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பெரும் அச்சறுத்தல்

இந்த புதிய திரிபு தீவிர அவதானத்திற்கு உரியது என்றும் நோய்த் தொற்றின் அதிவேகமான அதிகரிப்பு பெரும் அச்சுறுத்தலை கொண்டது என்றும் தென்னாபிரிக்க சுகாதார அமைச்சர் ஜோ பால்ஹா எச்சரித்துள்ளார். தென்னாபிரிக்காவின் தினசரி தொற்று சம்பவங்கள் கடந்த புதனன்று 1,200 ஆக இருந்தது. இதுவே இந்த மாத ஆரம்பத்தில் அது 106 ஆக மாத்திரமே இருந்தது.

இந்த புதிய திரிபு கண்டுபிடிக்கப்படும் முன்னர் பண்டிகைக் காலத்தை ஒட்டி வரும் டிசம்பர் நடுப்பகுதியில் ஆரம்பிக்கக்கூடிய நான்காவது அலை ஒன்று பற்றி தென்னாபிரிக்காவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நாட்டில் 22 புதிய வைரஸ் திரிபு சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அரசின் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வர்த்தக மையமாக இருக்கும் ஜொஹன்னஸ்பேர்க் மற்றும் தலைநகர் பிரிடோரியா மற்றும் குவாடெங் உட்கட நாட்டின் மூன்று மாகாணங்களில் சோதனையில் நோய்த் தொற்று கண்டறியப்படும் எண்ணிக்கை வேகமாக அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரிடோரியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றியில் வைரஸ் கொத்தணி ஒன்று ஏற்பட்டிருப்பது கவலை அளிப்பதாகவும் அது குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு பீட்டா வைரஸ் திரிபு தொன்னாபிக்காவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இந்தியாவில் டெல்டா வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த திரிபின் தொற்று எண்ணிக்கை தற்போது சரிந்துள்ளது.

ஆபிரிக்க பிராந்தியத்தில் அதிக பெருந்தொற்று பதிவான நாடாக தென்னாபிரிக்கா உள்ளது. அங்கு 2.95 மில்லியன் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 89,657 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த புதிய கொரோனா வைரஸ் திரிபில் 50 மரபணு பிறழ்வுகள் உள்ளன என்றும், ஸ்பைக் புரோட்டின் இடையில் 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் இருப்பதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரத இழையையே இலக்கு வைக்கின்றன. அதேபோன்று மனிதர்களின் உடலுக்குள் ஊடுருவ கொரோனா வைரஸ் இந்த ஸ்பைக் புரத இழையைத்தான் பயன்படுத்துகின்றது.

மனிதர்களின் உடலோடு முதலில் தொடர்பு கொள்ளும் ரெசப்டாரில் 10 பிறழ்வுகள் உள்ளன. உலகை உலுக்கிய கொரோனா வைரஸின் டெல்டா திரிபிலேயே ரெசப்டார்களில் இரண்டு பிறழ்வுகள் மட்டுமே இருந்தன.

கொரோனா வைரஸை தோற்கடிக்க முடியாத ஒரு நோயாளியின் உடலிலிருந்து இத்தனை அதிக பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

காகிதத்தில் மிகவும் அச்சுறுத்தக் கூடியதாக தோன்றும் பல கொரோனா திரிபுகள், எதார்த்தத்தில் ஒன்றுமில்லாமல் போய் உள்ளன. அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. கொரோனா வைரஸின் பீட்டா திரிபு இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மிகவும் அச்சுறுத்தக் கூடியதாக மக்களின் கவலைக்குரியதாக இருந்தது. அத்திரிபு மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சிக்காமல் தப்பிப்பதில் சிறந்து விளங்கியது. ஆனால் எதார்த்தத்தில் அதிவேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபு உலகை தவிக்க வைத்தது.

Sat, 11/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை