தேர்தல் சீர்திருத்தத்தில் ஒன்றுபட்ட கட்சிகள்

பொது நிலைப்பாட்டில் தமிழ்-, முஸ்லிம் கட்சிகள்

தேர்தல்கள் அனைத்தும் விகிதாசார முறைமையின் பிரகாரம் நடத்தப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளன.  இதன்மூலம் பன்மைத்தன்மை வாய்ந்த பிரதிநிதித்துவம் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கண்காணித்து சமநிலை படுத்தும் நிறுவனங்களாக அவை ஜனநாயகத்தின் பேரில் செயற்பட முடியும் என்றும் அக்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பாராளுமன்றத்தினதும், மாகாண சபைகளினதும், உள்ளூராட்சி மன்றங்களதும் கட்சி அங்கத்துவ எண்ணிக்கை தொகுப்பு, வாக்காளர்கள் கட்சிகளுக்களித்த வாக்கு ஆணையை அதிகபட்சமாக பிரதிபலிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வெற்றி பெரும் கட்சி, அளிக்கப்பட்ட வாக்குகளில் தாம் பெற்ற வாக்குகளின் விகிதாசாரத்தை விட, அதிக விகிதாசார எண்ணிக்கையில் ஆசனங்களை எடுத்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டுமென்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

உள்ளூராட்சி, மாகாணசபைகள், பாராளுமன்றம் ஆகிய மூன்று தேர்தல்களுக்குமான சீர்திருத்தங்கள், தெரிவுக்குழுவினால் ஒரே தடவையில் தயார் செய்யப்பட்டு, சட்டமூலத்தின் மூலம் அரசியலமைப்பு திருத்தமாக கொண்டு வரப்பட வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளனர்.

ஒத்தி வைக்கப்பட்டுள்ள மாகாணசபை தேர்தல்களை, முன்னுரிமை கொடுத்து, விகிதாசார முறையின் கீழ் நடத்த அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டுமென்றும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன. இந்த கலந்துரையாடலில் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், செல்வம் அடைக்கலநாதன், ஸ்ரீதரன், சித்தார்தன், இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார், ருஷ்டி, மதியூகராஜா, தவராசா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Mon, 11/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை