இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை

இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை

நெல் மற்றும் மரக்கறி உள்ளிட்ட பெரும்போக பயிர்ச் செய்கைக்காக இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பெரும்போக பயிர்களுக்குத் தேவையான தாவர ஊட்டச் சத்துக்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட இருப்பதாக  பரவலாக செய்தி வெளியாகியுள்ளது. உரிய தரத்தில் தரமான தாவர சத்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் தினகரன் வினவியதற்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இரசாயனப் பசளை இறக்குமதியை தடை செய்யும் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று குறிப்பிட்ட அவர், சேதனப்பசளை பயன்பாட்டுக்கு தேவையான அனைத்து முன்னெடுப்புகளும் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.

இரசாயனப் பசளை இறக்குமதியை அரசாங்கம் அண்மையில் நிறுத்தியதோடு சேதனப்பசளை பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இதற்கு எதிராக சில விவசாய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் அரசாங்கம் இந்தியாவில் இருந்து நெனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. ஆனால் இரசாயனப் பசளை இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு சில தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வந்த போதும் அரசாங்கம் தொடர்ந்தும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சேதனப்பசளை ஊக்குவிப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு விவசாயிகளின் உற்பத்தி குறைந்தால் இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது தெரிந்ததே.

Mon, 11/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை