வெள்ள நீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கற்பிட்டி மக்கள் கோரிக்கை

புத்தளத்தில் அண்மையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளநீரை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்குமாறு கற்பிட்டி ஆலங்குடா பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் கடும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. இதன்போது, கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்குடா கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆலங்குடா பி முகாம், அல் ஹிஜ்ரா, ஜின்னாபுரம், அல் அஸாம், அல் மனார், அல் ஜின்னா, மசூர் நகர், மரவன்சேனை பொலனி ஆகிய பிரதேசங்களும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

இதனால், சுமார் 490 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்துடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் ஸ்தம்பிதமடைந்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்று வரை தங்களது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். இவ்வாறு தங்கியுள்ள மக்களுக்கு பொது அமைப்புக்களின் நிதிப் பங்களிப்பில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வெள்ளத்தால் மூழ்கிய தமது பகுதிகளை பார்வையிட்டு, தேங்கி நிற்கும் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த 8 ஆம் திகதி பெய்த கடும் மழையினால் புத்தளம் மாவட்டம் வெள்ளத்தினால் மூழ்கியிருந்தது. எனினும், ஓரிரு நாட்களின் பின்னர் இவ்வாறு வெள்ளத்தினால் மூழ்கிய பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடியதுடன், மக்களின் இயல்பு வாழக்கையும் கட்டம் கட்டமாக வழமைக்குத் திரும்பியது.

எனினும், வெள்ளம் ஏற்பட்டு ஒரு வார காலம் நிறைவடைந்த நிலையிலும் புதன்கிழமை (17) வரை இவ்வாறு வெள்ளநீர் தேங்கியிருப்பது பெரும் வேதனையளிப்பதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன், வெள்ளத்தினால் மூழ்கியுள்ள தமது வீடுகளை அப்படியே விட்டுவிட்டு, உறவினர்களின் வீடுகளில் தாங்கள் தங்கியுள்ள போதிலும் தமது வீடுகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், சில வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, குறித்த பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ளநீரை முறையாக வெளியேற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

Fri, 11/19/2021 - 11:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை