விமர்சனங்களை தவிர்த்து கருத்துக்களை முன்வைக்கவும்

பாராளுமன்றத்தில் ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அறைகூவல்

எதிரணிக்கு சென்றதும் நல்லவர்களாகவும் அதிகாரத்தை கைபற்றியதும் கெட்டவர்களாகவும் சித்திரிக்கப்படுவதே தொடர்கிறது

கடந்த 'பட்ஜட்' களுடன் ஒப்பிடாது தற்போதைய நிலைமையை கருத்திற் கொள்ளுமாறு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு

ஒன்றாக பயணிக்காவிடின் நாட்டினை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல முடியாது

 

கடிமான சூழ்நிலையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் குறைபாடுகள் இருக்கலாம். தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்காது குறைபாடுகளை முன்வைக்குமாறு ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ஒன்றாக சேர்ந்து பயணிக்காவிடின், எமக்கு தனித்தனியாக புதைய நேரிடும்.மாற்றவர் மீது விரல் நீட்டிக்கொண்டிருக்காது தவறுகளை திருத்தி ஒன்றாக பயணிப்பதை தவிர வேறு மாற்றுவழி கிடையாது.

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,..

தற்போதைய நெருக்கடி நிலைமையை உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த கால வரவு செலவுத்திட்டங்களுடன் ஒப்பிடாது தற்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்யுமாறு கோருகிறேன்.

சர்வதேச மட்டத்தில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.சர்வதேச அளவீடுகளுக்கு பல்வேறு சுட்டிகள் பின்பற்றப்படுகின்றன.கடவுச்சீட்டு தர வரிசையில் கடைசி 10 நாடுகளிடையே தான் எமது நாடு உள்ளது. எமது நாட்டவர்களுக்கு 41 நாடுகளுக்கு தான் வீஸா இன்றி செல்ல முடியும்.

உலகில் 191 நாடுகளுக்கு வீஸா இன்றி செல்ல முடியுமான நாடுகளிடையே ஜப்பான்.கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளே உள்ளன. இலங்கையை சிங்கப்பூருக்கு முன்மாதிரியாக கொள்வதாக லீகுவான்யு அன்று சொன்னார்.ஆனால் இன்று எமது நாட்டுக்கு என்ன நடந்துள்ளது.இதற்கு வரலாற்றில் ஆட்சி செய்த பச்சை நிற அரசுகளா அல்லது நீல நிற அரசுகளா அல்லது சிவப்பு அரசுகளா பொறுப்புக் கூற வேண்டும். இல்லை. நாம் அனைவரும் இதற்கு பொறுப்பு.அனைவரையும் குற்றவாளிக் கூட்டில் நிறுத்த வேண்டும்.

இதில் இருந்து மீள்வதற்கு பாராளுமன்றத்திற்கு முதற்தடவையாக தெரிவான 58 புதிய எம்.பிக்களுக்கே இது தொடர்பில் தீர்வு உள்ளது. முதலில் பிரச்சினையை அடையாளங் காண வேண்டும்.அடுத்து அதற்கு தீர்வு

தேட வேண்டும். நாம் அனைவரும் அதற் பொறுப்பை ஏற்க வேண்டும்.அதற்கு இன்னும் காலம் உள்ளது என்று நினைக்கிறேன். குறைந்த பட்சம் எதிர்காலத்தின் பெயரிலாவது 225 பேரும் தேசிய நிகழ்ச்சி நிரலுடனும் தேசிய பொருளாதாரம்,கல்வி நிகழ்ச்சி நிரலுடன் கைகோர்க்க வேண்டும்.

மாறி மாறி மற்றவரை குற்றஞ்சாட்டுவதை விட இந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தில் வேறு என்ன செய்துள்ளோம். எதிரணிக்கு சென்றதும் நல்லவராகவும் அதிகாரத்தை கைபற்றியதும் கெட்டவர்களாகவும் சித்திரிக்கப்படுவதே தொடர்கிறது.73 வருட வரலாறு இதனை தான் கூறுகிறது.அனைவரும் தங்களை நியாயப்படுத்தப் பார்க்கிறார்கள். மற்றவர்கள் மீது விரல் நீட்டும் அசிங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தங்களை நியாயப்படுத்துவதைத தான் செய்கிறோம்.

சமூகத்தை பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.தொற்று நிலையில் மாணவர்களின் கல்விக்கே மீளத் திருப்ப முடியாத பாதிப்பு ஏற்பட்டது. இந்த காலப்பகுதியில் தான் அதிபர் ஆசிரியர் பிரச்சினை வெடித்தது. கல்வி அமைச்சராக சில காலம் பணியாற்றியவன் என்ற வகையில் 30 பில்லியன் ஒதுக்கி ஜனாதிபதி,பிரதமர்,நிதி அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவைக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஆசிரியர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும். திருப்தியான ஆசிரியர் சேவையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.பாடசாலை வாயில் மூடப்படுவதென்பது நாகரிகத்தின் வாயில் மூடப்படுவதாகும்.

கொள்கை வகுப்பவர்களாக இந்த விடயத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சிறந்த ஆசிரியர் சேவை உருவாக வேண்டும்.ஆசிரியர் சேவையில் 13 வகைகள் உள்ளன. இந்த நிலை மாற வேண்டும். வடக்கில் பயிற்றப்படாத ஆசிரியர்களே அதிகம் உள்ளனர். மாணவர்களின் கண்களை திறப்பது நாட்டுக்கான முதலீடாகும். ஆசிரிய கலாசாலைகளை அதிகரிக்க வேண்டும். 2027 ஆகும் போது ஆசிரியர் சேவையில் உள்ள அனைவரும் பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களாக இருக்க வேண்டும்.

ஆசிரியர்களுக்கு நியாயமான சம்பள வழங்க வேண்டும். 4 மில்லியன் மாணவர்களில் 1.4 பேருக்கே இணைய வசதி உள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் சகல பாடசாலைகளுக்கும் புரேட்பேண்ட் வழங்க நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நெருக்கடி நிலையில் கற்பதற்கு வேறு வழி திறக்கப்பட வேண்டும்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற வகையில் எதிர்கால முதலீடாக இவை அமையும்.இந்த இக்கட்டான நிலையில் இந்த மாற்று வழிகளை மேம்படுத்த வேண்டும்.ஒன்லைன் கல்வி என்பது கல்வித்துறைக்கு கிடைத்த ஔடதமாகும்.

பட்ஜட் என்றதும் பௌதீக ரீதியான விடயங்கள் பற்றியே சிந்திக்கப்படுகிறது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மணித்தியாலமும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்படுகிறது. வெளியில் வராத சம்பவங்கள் பல உள்ளன.பிள்ளைகளுக்கு உரிய அறிவூட்டல் வழங்கப்பட வேண்டும். சட்டத்தின் வாயிலாக பிள்ளைகளை பாதுகாக்க வேண்டும்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

 

 

Sat, 11/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை