விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுகோள்

ம.ம.மு. தலைவர் இராதாகிருஷ்ணன் MP

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் கோடிக் கணக்கான ரூபாய்களை இழந்திருக்கின்றார்கள் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் அவர்களுக்கு  நிவாரணத்தை அல்லது நட்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதலே நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக சீரற்ற காலநிலையே நிலவி வருகின்றது. இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள்.

இவ்வாறான ஒரு நிலைமையில் அரசாங்கத்தின் சேதன பசளை அறிவிப்பு அவர்களை இன்னும் படு குழியில் தள்ளிவிட்டுள்ளது. இதன் காரணமாக தங்களுடைய விவசாயத்திற்கு தேவையான பசளைகள் கிருமிநாசினிகள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியதுடன்.

அவற்றுக்கான பெரும் தட்டுப்பாடும் நிலவியது.

தட்டுப்பாடு காரணமாக பசளைகளின் விலைகளும் கிருமிநாசினிகளின் விலைகளும் என்றுமே இல்லாதவாறு விலை அதிகரிப்பு ஏற்பட்டது.

ஒரு சில வர்த்தகர்கள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தார்கள். இதன் காரணமாக விவசாயிகள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

ஒரு சில விவசாயிகள் கொரேனாவில் பெரும் பாதிப்பை சந்தித்ததுடன். விவசாயத்தை முன்னெடுக்க போதிய அளவு பணம் இல்லாததன் காரணமாக தங்களுடைய தங்க நகைகள், வாகனங்கள், வீடுகள் போன்றவற்றை அடகு வைத்து விவசாயத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் கடந்த சில வாரங்களாக சீரற்ற மிகவும் மோசமான காலநிலை நிலவுவதன் காரணமாக விவசாயிகளின் விவசாய நிலங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து 75 வீதத்திற்கும் அதிகமான பயிர்களை அழித்துவிட்டது.

இதன் காரணமாக விவசாயிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதுடன் அடுத்த கட்டம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள்.

எனவே இவர்களின் இந்த நிலைமையை கருத்தில் கொண்டு விவசாய திணைக்களத்தின் மூலமாக சரியான தகவல்களை பெற்றுக் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணங்களை அல்லது நட்ட ஈட்டை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Wed, 11/10/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை