ஒமிக்ரன் வைரஸ் நாட்டிற்குள் ஊடுருவுவதை தடுக்க அரசு சகல நடவடிக்கைகளும் எடுத்துள்ளது

சபையில் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அறிவிப்பு

ஒமிக்ரன் கடுமையான கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஆறு நாடுகள் தொடர்பில் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மூன்று நாட்களுக்கு முன்னர் இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், சுகாதார அமைச்சும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த புதிய தொற்று பற்றி அறிவதற்கு முன்னரே இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டது. ஜனாதிபதியும் அரசாங்கமும் இதில் விசேட அக்கறை எடுத்து வருகிறது.

அனைத்து விமான நிலையங்களிலும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும்,நாட்டுக்கு வரும் அனைத்து பயணிகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள், தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து, விமான நிலையங்களில் கூட விசேடசெயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

அனைத்து விமான நிலையங்களும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகின்றன. தற்போது, ​​விமான நிலையங்களில் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து சுகாதார செயலி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 06 நாடுகள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உலகின் மற்ற நாடுகளைப் போலவே நமது நாடும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Tue, 11/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை