புலிகளின் பிடியிலிருந்து முஸ்லிம் மக்களை காப்பாற்றியவர் மஹிந்த

பிரதமரின் பிறந்தநாள் பிரார்த்தனையில் நீதியமைச்சர் உரை

புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்கியிருந்த முஸ்லிம்களை காப்பாற்றியவர்தான் இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 76 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு ஆசி வேண்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட துஆ பிரார்த்தனையில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 14 வருடங்களாக நான் அவருடன் சேர்ந்து வேலைசெய்து வருகின்றேன். எனது செயல்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றவர்.அவர் சகல இன மக்களையும் சமமாக பார்க்கக்கூடிய ஒருவர்.

மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் ஆட்சியை ஏற்றபோது இலங்கையின் மூன்றில் இரண்டு பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. குறிப்பாக வடக்கு மாகாண முஸ்லிம்களை விடுதலைபுலிகள் பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு குறுகிய அறித்தல் மூலம் வெளியேற்றினார்கள்.

இவ்வாறு வெளியேற்றியவர்களை, மீண்டும் தங்களது சொந்த பிரதேசங்களுக்கு செல்லக்கூடிய நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் மூலம் அவர் சிறந்த தலைமைத்துவத்தை வழிநடத்தக்கூடிய தலைவராகக் காணப்படுகின்றார்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலைமைகளால் எல்லா முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் சிறந்த முடிவுகளை எடுத்து தீர்த்து வைத்துள்ளார்.

ஓட்டமாவடியில் இடம் ஒதுக்குவதில்கூட அவரின் ஒத்துழைப்பு கிடைத்தது.உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களை ஏனைய சமூகத்தினர் சந்தேகத்துடன் பார்த்து வருகிறார்கள். அதிலிருந்து வெளியே வருவதற்கான நிலைமையை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்

 

 

 

Sat, 11/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை