ஒன்லைன் மாநாட்டில் அமெரிக்க - சீன ஜனாதிபதிகள் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்

- நட்புறவை முன்னோக்கி இட்டு செல்வது தொடர்பிலும் அவதானம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கும் இடையில் ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று மெய்நிகர் மாநாட்டில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்ற பின்னர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்க் உடன் இடம்பெற்ற முதலாவது மெய்நிகர் மாநாடே இதுவாகும். இரு தலைவர்களுக்கிடையிலான இந்த மெய்நிகர் மாநாடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதாகும். ஆனாலும் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் இரு தலைவர்களும் இரண்டு தடவைகள் தொலைபேசி ஊடாக  ஏற்கனவே கலந்துரையாடியுள்ளனர் என்று ஏ.என்.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

இம்மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றிய ஜனாதிபதி பைடன், 'இந்த உலகம் தொடர்பிலும் எமது மக்கள் தொடர்பிலும் எமக்கு பொறுப்பு உள்ளது. எல்லாவற்றுக்கும் பொதுவான சட்டங்களின் பெறுமானங்களை எப்போதும் வலியுறுத்திவரும் அமெரிக்கா, அவ்வாறான சட்டங்களை  எல்லா நாடுகளும் கடைபிடித்தொழுகுவது அவசியம்.  அதனால் தான் அமெரிக்கா எப்போதும் எமது நலன்கள், பெறுமானங்கள் மற்றும் எங்களது அணியினரின் நலன்களுடன் நிற்கின்றது' என்று  குறிப்பிட்டதாக வெள்ளை மாளிகை ஊடகக் குழு தெரிவித்துள்ளது.

'காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களின் போது ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இம்மாநாட்டில் சுட்டிக்காட்டிய பைடன்,  நாங்கள் இருவரும் அச்சம் தரக்கூடிய வகையில் ஒருவருக்கொருவர் பேசிப்பேசியே நிறைய நேரத்தை செலவிட்டுள்ளோம். அதனால் முன்பைப் போன்றல்லாமல் மிகவும் ஒழுங்குமுறையாக நான் ஆரம்பிக்க விரும்புகின்றேன்' என்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியைத் தொடர்ந்து உரையாற்றிய சீன ஜனாதிபதி,  அமெரிக்க - சீன  நட்புறவை முன்னோக்கி இட்டுச்செல்வதற்கு ஏற்ப ஒருமித்த கருத்தை உருவாக்க பைடன் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளதோடு, இரு நாடுகளும் அபிவிருத்தியின் முக்கிய கட்டத்தில் இருப்பதாகவும், பூகோள கிராமத்தின் மனிதகுலம்' பல சவால்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் மற்றும் கொவிட் 19 பெருந்தொற்று போன்ற உலகளாவிய சவால்களுக்கு பயனுள்ள பதிலைக் கண்டறிவதற்கும் இரு நாடுகளதும் கௌரவமான அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கும், உறுதிமிக்க சர்வதேச சுற்றுச்சூழலையும் அமைதியையும் பாதுகாக்க சீன - அமெரிக்க நட்புறவு அவசியமானது. அதனால் அந்நட்புறவை ஆக்கபூர்வமான பாதையில் முன்னெடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sun, 11/21/2021 - 16:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை